September 02, 2009

‘பஞ்ச்’ டயலாக்கில் மாட்டிக்கொண்ட பெண்கள்

தமிழ் சினிமாவில் பெண்கள் பற்றிய ஒரு அலசல்
1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் சினிமாவிற்கு வயது கிட்டதட்ட எண்பது ஆகிறது. முதல் பேசும் படமான காளிதாஸில் ஆரம்பிக்கிறது நமது சினிமா வரலாறு. இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள். வருடத்திற்கு ஐநூறு கோடிக்கும் மேல் பணம் புரளும் இடம். தமிழ் நாட்டிற்கு நான்கு முதல்வர்களையும் தந்திருக்கிறது. நம் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இந்த சினிமாதான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் பொதுவான பேச்சாய் சினிமாவாகத்தான் இருக்கும். இப்போது சின்ன திரையும் சினிமாவை நம்பியே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறது. எல்லா விசேச தினங்களையும் அதுதான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. வேறென்ன செய்கிறது?

சினிமா ஒரு படைப்பாய், ஒரு கலையாய் அதன் ஆளுமை தமிழ் சினிமாவில் என்ன செய்கிறது? அத்தனையையும் மொத்தமாய் பேசிவிட முடியாது. தமிழ் சினிமா பெண்களை எப்படி காட்டிக் கொண்டிருக்கிறது? நம் இந்திய சினிமாவும் உலக சினிமாவும் காட்டின பெண்களில் ஒரு பகுதியையேனும் நம் சினிமா காட்ட முயன்றிருக்கிறதா? அதுதான் இங்கே பெரிய கேள்வியே.

ஆரம்ப காலங்களில் வந்த புராண படங்கள். அதில் வந்த பெண்கள். அந்த சத்தியவான் சாவித்திரியையும், பத்தினி பெண்களையும், கணவனே கண் கண்ட தெய்வங்களையும் விட்டுவிடுவோம். பெண்களை வெறும் குடும்பம் தாங்கிகளாக மட்டுமே காட்டிக்கொண்டிருந்த குடும்ப விளக்குகளையும், தெய்வ பிறவிகளையும், மாதர்குல மாணிக்கங்களையும் மன்னிப்போம். இந்த மிகப் பெரிய அறிவியலின் வீச்சுகள் புரியாமல் முடிந்துவிட்ட சோதனைகள் எனலாம். அதற்கு பிறகு அதன் அசுர பலம் புரிந்தவர்கள் அதை தங்கள் அரசியல் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்கள். அவர்கள் கட்சியின் கொள்கை பரப்பும் பிரச்சார களமாகவே சினிமா இருந்தது. சில முற்போக்கு கருத்துக்கள் அதுவும் ஆண் வாயிலிருந்தே தெரிந்துக் கொள்ளும் விதமாய் வெளிப்படுத்தினார்கள்.

1954 ல் வெளிவந்த ‘அந்த நாள்’ அந்த சமயத்தில் வந்த ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் ரஷோமானின் பாதிப்பில் வந்தது. என்றாலும் அது முதலில் ஒரு பெண்ணின் கையில் துப்பாக்கியை தருகிறது. நாட்டிற்கு எதிராய் துரோகம் செய்யும் தன் கணவனை சுடச் செய்தது. மணாளனே மங்கையின் பாக்கிய காலத்தில் அது ஒரு பெண் எடுத்த துணிச்சலான முடிவென்றே சொல்லலாம். ஆனால் அந்த துணிச்சல் அந்த படத்தோடு நின்று போனது. மீண்டும் மாலா ஒரு மங்கள விளக்கு, மாமியார் மெச்சிய மருமகள், பெண் குலத்தின் பொன் விளக்கு, மாதர்குல மாணிக்கம், தெய்வ பிறவி என்றே படங்கள் வந்து குவிந்தன. மீறி வந்தால் சித்தூர் ராணி பத்மினி மின்னல் வேகமாய் கத்தி சுழற்றுவாள். கன் பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டாவும் துப்பாக்கியில் மிரட்டுவார்கள். ஜக்கம்மா குதிரை தாண்டுவாள். அத்தனையும் மிகைப்படுத்தப்பட்ட கதாநாயக சாகசங்களோடே வந்த திரைப்படங்கள். பெண்கள் பெயரிலேயே படங்களின் பெயர் வைக்கப்பட்டது, அவர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது போல் காட்டப்பட்ட படங்கள் அவர்கள் மீதான அக்கறையில் செய்யப்பட்டவைகள் அல்ல. அவைகள் பெண்களை திரையரங்களுக்குள் வரவைக்கும் உத்தியாகவே பயன்படுத்தபபட்டன. வியாபாரிகளிடம் மாட்டிக்கொண்ட சினிமாவில் என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்கள் பெண்களை தேவையென்றால் தெய்வமாக்குவார்கள் இல்லையென்றால் தெருவில் போட்டு மிதிப்பார்கள். அது அவர்களின் அக உலகங்கள் அவர்களின் பிரத்யேக வாழ்நிலை ஆசைகளையோ அலசிப் பார்க்கும் அக்கறை அவர்களுக்கு எதற்கு?

1969 - ல் துலாபாரம் (மூலம் மலையாளம்) வந்தது. கதை தோப்பில் பாசி. இயக்கம் வின்செண்ட். அப்போது கேரளாவில் வளர்ந்து வந்த பொது உடைமை இயக்கத்தின் தொழிற்சங்கங்களை கொச்சைப்படுத்தவே இந்த படம் எடுக்கப்பட்டதாக கடும் விமர்சனத்திற்கு ஆனது. நிறைய மொழிகளில் எடுக்கப்பட்டது. கதை திடீரென கணவன் இறந்து போக வாழ்கையை எதிர்கொள்ளும் கதாநாயகியையும் அவளது குடும்பத்தையும் பற்றியது. நடிகை சாரதாவிற்கு தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது. ஆனால் அதில் கதாநாயகி படித்த பெண்ணாய் இருந்தும் கணவனுக்கு பிறகான வாழ்கையை எதிர் கொள்ள முடியாமல் வறுமையின் உச்சகட்டத்தில் தன் குழந்தைகளை தானே கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சிப்பாள். இந்த படம் தன்னம்பிக்கை இல்லாமல் பெண்களை பலவீனப்படுத்தி பரிதாபத்திற்குரியவள் ஆக்கி அசிங்கப்படுத்தியது. ஆனால் ராஜாஜியின் கதையில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974 ல் வெளி வந்த திக்கற்ற பார்வதியில் துணையை இழக்கும் நாயகி தனக்கு வரும் துன்பங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வாள்.

அந்த சமயத்திலும் கதாநாயகர்களிடம்தான் மாட்டியிருந்தது இந்த கலை. அவர்கள் சொல்லுதலே சமூகத்தின் விதியாகவும் மாறிக்கொண்டிருந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள என்று பாடிக்கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு கோட்பாடுகள் சொல்லுவார்கள். ஆண்களுக்கு அப்படி எதுவும் இருக்காது. அந்த உரத்த குரல்களுக்கு பெண்களும் சேர்ந்து யோசிக்காமல் கை தட்ட பட்டிக்காடா பட்டணமா, பூவா தலையா, அத்தையா மாமியா போன்ற பிற்போக்கு படங்கள் வரத்தொடங்கின.

அந்த சமயத்தில் மத்திய தர மக்களின் பிரதிநிதியாக இயக்குனர் பாலச்சந்தர் வந்தார். நாடகத்தன்மைகளை கழற்றி எறிய ரொம்பவே சிரமப்பட்டார். சினிமா மொழி அவரிடம் பலவீனமாய் தெரிந்தாலும் அவரது இயக்கத்தில் 1973 ல் வெளிவந்த அரங்கேற்றமும், 1974 ல் வெளி வந்த அவள் ஒரு தொடர்கதையும் குறிப்பிட வேண்டிய படமாகவே இருக்கிறது. அவைகள் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்கள் சுயநலன்களுக்காக பெண்களை எப்படி சுரண்டித் தீர்க்கின்றன என்பதை தெளிவாகவே காட்ட முயற்சித்தன எனலாம். ஆனால் அதில் அரங்கேற்றத்தின் முடிவு இயக்குனரின் வியாபார பயத்தை காட்டியதே தவிர பெண்ணின் மீதான சமூக அக்கறையாக வெளிப்படவில்லை. அதே வருடம் வெளிவந்த சூரியகாந்தி படம் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெண்ணை பற்றியும் அதனால் அவள் கணவனுக்கு ஏற்படும் ஈகோவைப் பற்றியும் பேசியது. இதன் தொடச்சியில் முக்கிய காலகட்டமாக 1977 மற்றும் 1978 ஐச் சொல்லலாம். கற்பு நிலையை சாதாரணமாக்கின ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்கம் பீம்சிங்), ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சித்தரிக்க முயன்ற பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள் (இதன் முடிவும் பலவீனமானது) இவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்த சமயத்தில் மிக முக்கிய படமாய் ருத்தரய்யாவின் அவள் அப்படித்தான் (1978) வந்தது. கதை அமைப்பிலும் அதை காட்சி படுத்தியதிலும், வசனத்திலும் மிக சிறப்பாய் வந்த படைப்பாய் இதை கொண்டாடலாம். வசனம் எழுத்தாளர் வண்ணநிலவன். இவரை இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பெரியதாய் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரியாத புதிர். அந்த வருத்தத்தை பிறகு பார்ப்போம். அவள் அப்படித்தான் மஞ்சு கதாபாத்திரம் வியப்பானது. ஆச்சர்யங்கள் நிறைந்தது. மிக துணிச்சலானது. மிக வெளிப்படையாய் தன் சுயத்தோடு தன் அறிவோடு இருக்க நினைக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி கேவலமாய் பார்க்கிறது என்பதை மிக தெளிவாய் சொல்ல நினைத்த தமிழ் படம் இதுதான். புத்திசாலி பெண்ணை ஏற்க மறுக்கும் ஆணின் பயம் தெளிவாய் வெளிப்பட்டிருந்தது. அந்த யதார்த்தம் அந்த திரைப்படத்தின் கடைசி காட்சியிலும் இயக்குனர் அழகாய் சொல்வார்.

கமலஹாசன் அவரது புது மனைவியுடன் காரில் வர மஞ்சு அவர்கள் அருகில் அமர்ந்திருப்பாள். மஞ்சு மெதுவாய் அந்த புது பெண்ணிடம் கேட்பாள்.
“பெண்கள் சுதந்தரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்..”

அவள் சற்று குழப்பமாகி விட்டு பதில் சொல்லுவாள்.

“எனக்கு அதப்பத்தி எதுவும் தெரியாது..”

மஞ்சு சிரித்தபடி பதில் சொல்லுவாள்.

“அதனாலதான் நீ சந்தோசமாக இருக்கிறாய்..”

இன்றுவரை கூட இந்த அளவு பெண்ணின் மிக நேர்மையான எதார்த்தமான பக்கங்களை காட்டின படம் வந்ததில்லை எனலாம்.

இதற்கு பிறகு பாலுமகேந்திராவின் வீடு படத்தைச் சொல்லலாம். நடுத்தரவர்க்கத்தின் வீடு கட்டும் சராசரி ஆசையையும், அதற்கான சிக்கல்களையும் அதற்கான இழப்புகளையும் வருத்தங்களையும் ஒரு பெண்ணின் மூலமாய் நன்றாக வெளிப்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா. அதில் அந்த கதாபாத்திரம் சராசரி கதாநாயகிகளின் எந்த அலங்காரத்திலும் இல்லாமல் நம் வீட்டருகில் பார்க்கிறமாதிரி இயற்கையாய் இருந்தாள். பிறகு பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை (சரிதா), நிழல் நிஜமாகிறது (சுமித்ரா), காதலுக்காகவே அதிகபட்சம் பெண் கதாபாத்திரங்களை படைத்திருந்தாலும் பாரதிராஜாவின் புதுமைபெண்ணையும் (தலைப்பு சற்று நெருடலாய் இருந்தாலும்), பெண் சிசு கொலைகளை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தின கருத்தம்மாவையும் குறிப்பிட வேண்டிய பெண்கள் பற்றிய படைப்புகள் எனலாம். இயக்குனர் துரையின் பசி, பெண்ணின் ஒருதலைக் காதலைச் சொன்ன தேவராஜ் மோகனின் அன்னக்கிளியையும், மொழி மாற்ற படங்கள் என்றாலும் காதலித்து விட்டு ஏமாற்ற நினைக்கும் காதலனை நீதிமன்றத்தில் ஏற்றி நியாயம் கேட்கும் ஒரு பெண்ணைப் பற்றின படமான கே.விஜயனின் விதியும், ஆண் துணை வேண்டாமே தனித்து வாழ முடிவெடுக்கும் ஒரு பெண்ணின் தைரியத்தைச் சொன்ன பாலுமகேந்திராவின் மறுபடியையும் பெண் சார்ந்த படங்களில் முக்கியமானவையாகக் கருதலாம். பிறகு 1984 ல் வெளி வந்த ஆர்.சி.சக்தியின் சிறை. அதன் கதை அனுராதாரமணன். அதில் வரும் நாயகி தன் தாலியை தூக்கி எறிந்து விட்டு யாருடன் கணவன் சந்தேகப்பட்டானோ அவனுடனே வாழ முடிவெடுக்கிறாள். எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். நம்பிக்கைகள் உடையும்போது சமூகத்தின் கட்டுபாடுகளும் உடையும் என்பதை மிக அழுத்தமாய் சொல்லியிருந்தார்.

ஆனால் அதெல்லாம் அந்த காலம் என்பது மாதிரி ஆகிவிட்டது. இருந்த துளிரும் பிடுங்கப்பட்டது. காரணம் சமீபத்திய சினிமாக்கள் மீண்டும் முன்பு எப்போதும் விட கதாநாயகர்கள் கையில் மாட்டிக்கொண்டிருப்பதுதான். அவ்வளவு சுலபமாய் மீள முடியாத துன்பத்தில் இருக்கிறது. பெண்கள் அந்த கதாநாயகர்களின் வில்லியாக சித்தரிக்கப்படுகிறார்கள். சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று ஆட்டோகளுக்கு பின்னால் எழுதப்படும் அபத்த வாசகங்கள் போல் கதாநாயகர்கள் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்.

அவர்களின் பஞ்ச் டயலாக்களில் மாட்டிக் கொண்டு பாவம் பெண்கள் மீளமுடியாமல் முழிக்கிறார்கள். இவர்களின் இமேஜில் மாட்டிக் கொண்டு தங்கள் திறமையோடு காணாமல் போகிறார்கள். காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்குமே வந்து போகிறார்கள். குறைந்த உடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து வந்தால் ஒரு கோடி சம்பளமாம். பாத்திர படைப்பைப் பற்றியோ அதன் குணாதிசயம் பற்றியோ இங்கே நடிகைகள் உட்பட யார் கவலைப்படுகிறார்கள்?

சரி அந்த கால அல்லது இந்த கால பெண் இயக்குனர்கள் என்ன செய்தார்கள்? லட்சுமி, ஜெயதேவி, பி.ஆர். விஜயலட்சுமி, சுஹாசினி, பிரியா போன்ற இயக்குனர் கூட பெரியதாய் பெண் உணர்வை பேசவில்லை. இதில் சுஹாசினி எடுத்த இந்திராவை விட அவர் சின்ன திரையில் செய்த பெண் என்ற தொடரும், ஜானகி விஸ்வநாதனின் குட்டியுமே (ஒரு வீட்டில் வேலையாக இருக்கும் ஒரு சிறுமியைப் பற்றிய கதை) ஒரளவு உணர்வை தந்தது.

சமீபத்திய ஆண் இயக்குனர்களின் படங்களில் ராதாமோகனின் மொழி படத்தில் வரும் வாய்பேச முடியாவிட்டாலும் தன் மீது பரிதாபப்படுபவர்களை உதறித்தள்ளும் அந்த கதாநாயகியையும், பிரியதர்சனால் எடுக்கப்பட்ட முழுவதும் பெண்களாகவே நிறைந்த சிநேகிதியேயையும் குறிப்பிட்டு சொல்லலாம். பிறகு அமீரின் பருத்திவீரன் நாயகி முத்தழகி. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென அந்த திரைப்படம் பயமுறுத்தினாலும் அந்த முரட்டு பெண்ணின் காதலை மறக்கமுடியாது. பிரியாமணிக்கு அது தேசிய விருதினை பெற்றுத் தந்தது. அதற்கு எதிர்பதமாய் இயக்குனர் சசியின் பூ படம் இருந்தது. அவரின் அந்த மாரி கதாபாத்திரம் பாரதிராஜாவின் மண்வாசனையின் முத்துபேச்சியை ஞாபகப்படுத்தினாலும் தன் காதலை தனது கல்யாணத்திற்கு பிறகு மிக மிக மென்மையாய் எண்ணிப் பார்க்கும் தைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

நிஜத்தில்- சமூகத்தின் எல்லாத்துறையிலும் பெண்கள் மிக பெரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொழிலதிபர்களாய், விண்வெளி நிபுணர்களாய், பொறியாளர்களாய், பைலட்டுகளாய், இரவு நேர கால் சென்டர் ஊழியர்களாய் என பல விதத்திலும் உயர்ந்திருக்கிறார்கள். அந்த முன்னேற்றங்களை இன்றைய தமிழ் சினிமா காட்டுகிறதா என்றால் கேள்விக்குறிதான்.எனக்கு தெரிந்த சினிமாவில் இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் உதவி இயக்குனர்களிடம் இந்த கேள்வி கேட்டுப் பார்த்தேன். பெண்களை மையப்படுத்தும் கதைகள் உங்களிடம் உண்டா என்று? அவர்களின் பெரும்பான்மையான பதில் இதுதான். அந்த வகை கதைகள் எல்லாம் சின்னத்திரைக்கு மட்டுந்தானாம். கதை என்றால் அது கதாநாயகர்களை சுற்றித்தானாம். அத்தகைய கதைகளைத்தான் தயாரிப்பாளர்களும் கேட்கிறார்களாம். தொழில்ரீதியான வியாபார நியாயத்தை சொன்னார்கள். ஆண்களின் கதைகளைத்தான் பெண்களும் பார்க்க வேண்டும். அதுயென்ன சமூக நியாயம் என்று புரியவில்லை. சரி அப்படி கதாநாயகர்களை நம்பி எடுக்கப்படும் படங்கள் எல்லாம் ஓடுகிறதா என்றால் அவர்களின் இரு தரப்பிலும் மெளனம் மட்டுமே பதிலாய் இருக்கிறது.

இந்திய அளவில் ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா, சத்யஜித்ரேயின் சாருலதா, மெஹ்பூப்கானின் மதர் இண்டியா, தீபா மேத்தாவின் பயர், அபர்ணாசென்னின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர், உலகளவில் பெண்கள் மனதை கூறு போட்டு பார்க்கும் ஸ்வீடன் நாட்டு இயக்குனர் இக்மர் பெர்க்மெனின் ஆட்டம் சொனாட்டா, க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், ஈரானிய இயக்குனர் மார்சேக் மஸ்கினியின் த டே ஐ பிகேம் எ உமென், சீன இயக்குனர் யாங் இமோவின் ரோட் ஹோம் மற்றும் ஸ்டோரி ஆப் த க்யூ ஜூ மாதிரியோ கூட இங்கே படங்கள் தேவையில்லை. பூவே பூச்சூடவாவில் வரும் அந்த குறும்புக்கார நவீன மங்கை சுந்தரி (நதியா) கூட காணாமல் போனதுதான் வருத்தமாய் இருக்கிறது. விளம்பரங்கள் பயன்படுத்தும் வியாபார உத்தியாக மட்டுமே சினிமாவில் பெண்கள் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு யார் காரணம்? மக்களா? இயக்குனர்களா? அல்லது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களா? யார் இதை காதில் வாங்கிக்கொண்டு பதில் சொல்லப்போகிறார்கள்? தெரியவில்லை.

சினிமா என்பது மிக பெரிய ஆயுதம். இந்த ஆயுதத்திற்கு இரண்டு முனைகள் இருக்கிறது. அதன் ஒரு நல்ல முனையை யார் சரியாய் பயன்படுத்த போகிறார்கள்? அதுவும் தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவிற்கு வயது மட்டும் எண்பதாக போகிறது. அது ஒரு சாதனையா என்பதுதான் கேள்வியே..!

8 comments:

  1. //புதுமைபெண்ணையும்( தலைப்பு சற்றே நெருடலாயிருந்தாலும்)//

    //மறுபடியையும்//

    :-)

    //இங்கே நடிகைகள் உட்பட இங்கே யார் கவலைப்படுகிறார்கள்// - நடுநிலையான விமர்சனம்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்
    (பயணிகள் கவனத்திற்கு! மறுமொழிப் பெட்டியில் copy paste வேலை செய்யவில்லை!)

    ReplyDelete
  2. தமிழ் சினிமாவில் பெண்களை பற்றிய விமர்சனத்தை அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவின் பிறப்பிலிருந்து இன்று வரையிலான பயணத்தில் நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் ஏற்றதாழ்வுகளை ஆழமாகவே அலசி இருக்கிறீர்கள். அருமையான பதிவு.

    ReplyDelete
  3. //ஆண்களின் கதைகளைத்தான் பெண்களும் பார்க்க வேண்டும். அதுயென்ன சமூக நியாயம் என்று புரியவில்லை.//

    :-(

    ReplyDelete
  4. கதையைவிட சதையை அதிகம் நம்பிப் படம் எடுக்கிற சூழல்தான் இப்போது நிலவுவது. புதுமைப்பெண் என்பதை இயக்குநர்கள் தப்பாகப் புரிந்துகொண்டு உடையைக் குறைத்து,நடையை நெளித்துவிட்டார்கள் போல. கொஞ்சம் விட்டால் பெண்களைக் கூட பஞ்ச் டயலாக்குகள் சொல்லவைத்துவிடுவார்கள். நீங்களெல்லாம் நினைத்தால் திரையில் பெண்களுக்காக மறுபடி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

    சித்ரன்
    http://chithran.com

    ReplyDelete
  5. நல்ல அலசல். ஆனல் நீங்கள் சொல்வதுபோல நாளை இயக்குனர்களாக போகும் உதவி இயக்குனர்களே ஆணை சுற்றிய கதைகளைதான் உருவாக்குகிறார்கள் (நிர்ப்பந்தம்??) எப்படி பெண்களை மையமாக வைத்து படங்கள் வரும் என தெரியவில்லை.

    தற்போது பெண்களை வெறும் அழகு பதுமைகளாகத்தான் திரையுலகம் பயன்படுத்துகிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

    அதிகமான பெண்கள் திரையுலகில் பல்வேறு துறைகளிலும் நுழைந்து செயல்படுவது மூலமே இதற்கு ஒரு முடிவு ஏற்படும் என நினைக்கிறேன். அதற்கு சமூகரீதியான ஆதரவு நிச்சயம் தேவை. அது கிடைக்குமா என்பது தான் கேள்விக்குறி!

    ReplyDelete
  6. நன்றி வெங்கட்ராமன், ஆரியவர்தன், சத்யராஜ்குமார், சித்ரன், மஞ்சூர் ராசா.

    @மஞ்சூர் ராசா: தமிழ்த் திரையுலகில் ஒரு சில பெண் இயக்குநர்கள் உருவானபின்னரும்கூட பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்பதுதான் என் வருத்தமே.

    ReplyDelete
  7. RAVI.R
    enbadhu varuda tamilcinemavil pengal, oru nermayana alasal.padikum ellorum oppukollum vunmai.sila directors herovana padangalil kooda pengalin nilai maradhadhu varuthathirkuriyathu.vungal cinemavil andha nilai marum endru ninaikiren. thanks.

    Ravi.R

    ReplyDelete
  8. விளம்பரங்கள் பயன்படுத்தும் வியாபார உத்தியாக மட்டுமே சினிமாவில் பெண்கள் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு யார் காரணம்?//
    ஆழமாகவே அலசி இருக்கிறீர்கள். அருமையான பதிவு.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் மேலானவை.