March 03, 2010

திருவல்லிக்கேணி, தடம் எண் 13

சரசுராம் - சிறுகதை
கல்கி - நவம்பர் 2009




வனை அந்த இடத்தில் பார்த்த போது என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு இடம் ஒரு மனிதனின் வாழ்க்கையை இவ்வளவு ஆக்கிரமிக்குமா? நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.

அவன் பரணி. பரணீதரன். அவனை நான் முதலில் சந்தித்தது ஆறாம் வகுப்பு படிக்கிறபோதுதான். அதுவும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வைத்துதான் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. என்னை பஸ் ஏற்றி ஸ்கூலுக்கு அனுப்ப எங்கள் அம்மா பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தார்கள். பரணியும் நான் போகிற பஸ்ஸுக்காகத்தான் காத்திருந்தான். தனியாகத்தான் நின்றிருந்தான். கூட யாரும் வந்த மாதிரி தெரியவில்லை. இவ்வளவு தைரியமா? ஆச்சர்யமாய் அவனை பார்த்தேன். அவனும் என் பள்ளிதான் போலும்.அதே யூனிபார்மில்தான் இருந்தான். அம்மாதான் அவனிடம் முதலில் பேச்சுக் கொடுத்தார்கள்.

“ஏன் கண்ணு நீயும் மகாலிங்கபுர பள்ளிக்கோடத்திற்குதா போறயா?” என்றார்கள்.

அவன் நிமர்ந்து அம்மாவை பார்த்தான். ஆமாம் என்கிறமாதிரி தலையை மட்டும் ஆட்டினான்.

“விக்னேஷையும் கூட கூட்டிட்டு போறயா..கண்ணு?” என்றார்கள் அம்மா.

பரணி அதற்கும் சரி என்கிற மாதிரி தலையை ஆட்டினான். நானும் மறுப்பேதும் சொல்லவில்லை. அம்மா தைரியமாய் கிளம்பிக் கொண்டார்கள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் எங்கள் பஸ் வந்தது. பரணி சொல்லாமல் கொல்லாமல் திடீரென ஓடினான். கண்டக்டர் திட்ட திட்ட மின்னல் வேகத்தில் அந்த பஸ்ஸில் ஏறினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நிறைய கூட்டம் அவனை தொடர்ந்து ஓடியது. அடப்பாவி இப்படி விட்டுட்டு போயிட்டானே என்று நினைத்தபடி கடைசியாய் பஸ்ஸில் ஏறினேன். உள்ளே போக அவன் பின்னால் என் சட்டையை பிடித்து இழுத்தான். ஸ்கூல் பையை வைத்து எனக்காகவும் ஒரு இடம் போட்டிருந்தான். அப்படிதான் பரணி என் நெஞ்சில் இடம் பிடித்தான்.

இருவரும் ஒரே வகுப்புதான்.மதியம் சாப்பிடும் போது ஒன்றாய் சாப்பிட்டோம். அதற்கு பிறகு ஒவ்வொரு நாளும் பஸ் ஸ்டாண்டில் எனக்காக அவன் காத்திருப்பான். ஒவ்வொரு நாளும் ஓடிப்போய் பஸ்ஸில் எனக்காகவும் இடம் பிடித்தான். போகிற போது பஸ் டிரைவரிடம் தயக்கமின்றி அரட்டை அடிப்பான். பிடித்த பாடல் போடச் சொல்லுவான். அவன் ஒரு நாள் வராவிட்டாலும் கண்டக்டர் என்னிடம் விசாரிப்பார். அது மட்டுமல்ல பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பெட்டிக் கடையிலும் அவனுக்கு நட்பிருந்தது. கடன் சொல்கிற அளவுக்கு நட்பு. அவன் போன உடனேயே கடைக்காரர் கேட்காமலேயே அவனிடம் சுவிங்கத்தை நீட்டுவார்.

பரணிக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை. ஒவ்வொரு வருசமும் அவன் தேறும் போது அவனை விட எங்க வாத்தியார் அதிகம் ஆச்சர்யப்படுவார். விதி விலக்கில் தப்பித்துக் கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பு வரும் போது பரணி ஆளே மாறிப் போனான். லேசாய் மீசை முளைத்திருந்தது. பேச்சில் தொனி மாறியிருந்தது. தலை முடியை பெரியதாய் வளர்த்தி பின்புற பேண்ட் பாக்கெட்டில் சீப் வைத்திருந்தான். அவனுக்கென ஒரு குரூப் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும். அவனைவிட வயதில் மூத்த பையன்கள் அவனுக்கு நட்பாயிருந்தார்கள். என்னை முதலில் பஸ்ஸில் அனுப்பி விட்டு பிறகு வருகிறேன் என்பான். கொஞ்ச நாள் எனக்கு காரணம் புரியவில்லை. ராஜேஷ்தான் சொன்னான்.

“அவன் கேர்ள்ஸ் ஹைஸ்கூல் பொண்ணுகள சைட் அடிச்சிட்டு அப்புறம்தான் பஸ் ஏறிவான். அதுமட்டுமல்ல அவன் தம்மெல்லாம் அடிக்கறான்டா..” என்றான்.

என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாய் இருந்தது. ராஜேஷ் சொன்ன அடையாளங்களோடு பரணியை ஒருநாள் பார்த்தேன். கையில் தம். புகை நடுவே அவனது வெறித்தப் பார்வையில் அழகியப்பெண்கள். எனக்கு அவனை பார்க்க பயமாய் இருந்தது.

ஒருநாள் பஸ்ஸிற்கு காத்திருக்க திடீரென இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை கம்பு எடுத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தார்கள். ஆளுக்கொரு திசையில் நாங்கள் என்னவென புரியாமல் தலைதெறிக்க ஓடினோம். பரணி ஒரு டீக்கடைக்குள் ஓடி மறைந்தான். நான் பஸ் ஸ்டாண்டின் சைக்கிள் ஸ்டாண்டில் நுழைந்தேன். சுவற்றில் ஏறினேன்.செருப்பு நழுவியது. குதித்து ஓடினேன். கை கால்களில் சிராய்ப்புகளின் எரிச்சல். ராஜேஷ் மூச்சிறைக்க கொஞ்ச தூரத்தில் என்னுடன் வந்து இணைந்து கொண்டான். எனக்கு ஆறுதலாயிருந்தது. அவன்தான் போலீஸ் துரத்தின காரணத்தைச் சொன்னான்.

“பரணி குரூப்பெல்லாம் ஸ்கூல் புள்ளைகள சைட் அடிச்சு கலாட்டா பண்றத யாரோ போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்களாம். அதான் எல்லாத்தையும் விரட்டறாங்க..” என்றான்.

இந்த விஷயம் வீட்டிற்குத் தெரிய அம்மா என்னை துரத்தி துரத்திஅடித்தார்கள். இதுக்கு போலீஸ்கிட்டயே அடிவாங்கியிருக்கலாம். அவ்வளவு அடி. இனி பரணி கூட உன்னை பார்த்தேன். காலை உடச்சு அடுப்பில வச்சிருவேன் என்றார்கள்.

அதற்கு பிறகு நான் பரணியுடன் பேசுவதை குறைத்துக் கொண்டேன். பஸ்ஸில் கூடப் போவதையும் நிறுத்துக் கொண்டேன். எப்போதாவது பேசுவேன். அதற்கு பிறகும் அவனிடம் பெரிய மாற்றம் தெரியவில்லை. அவன் எப்பொழுதும் போல் பஸ் ஸ்டாண்டில்தான் நின்றிருந்தான். நான் கையை மட்டும் காட்டி விட்டு நகர்ந்து கொள்வேன். எப்போதாவது நிற்க நேர்ந்தாலும் கொஞ்சம் தள்ளியே நின்றுக் கொண்டேன். அவ்வப்போது அவனை கவனிப்பேன். பஸ் ஸ்டாண்டின் அத்தனை விஷயமும் அவனுக்கு அத்துபடியாய் இருந்தது. எந்த ஊருக்கு என்ன பஸ் என்பதையெல்லாம் விசாரிப்பவர்களுக்கு மிக சரியாக சொல்லுவான். அது எத்தனை மணிக்கு வரும். எத்தனை மணிக்கு கிளம்பும் என்பதுகூட அவனுக்கு மனப்பாடம்.

“இந்த ஞாபக சக்தி அவன் படிப்பில இருந்திருந்தா அவந்தான்டா நம்ம ஸ்கூல் பர்ஸ்ட்..” என்பான் ராஜேஷ்.

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயத்தல டேலண்டா இருப்பாங்க. அவன் இந்த விஷயத்தில் டேலண்ட்..” என்றேன்.

“என்ன டேலண்ட்? பிரயோஜனமில்லாத டேலண்ட்.. எப்பப் பார்த்தாலும் பஸ் ஸ்டாண்டில இருந்துட்டு.. பஸ் ஸ்டாண்ட் பரணின்னு பேரே வாங்கிட்டான். என்ன ஆகப் போறானோ தெரியல..”

ராஜேஷ் எப்போதும் வருத்தப்படுவான். எனக்கும் பரணி மேல் அந்த வருத்தம் உண்டு. ஒரு முறை அவனிடம் பேசிப்பார்த்தேன்.

“டேய்..பஸ் ஸ்டாண்ட் பத்தி உனக்கென்ன தெரியும்? இவ்வளவு சுவாரஸ்யமான இடம் வேற எதுவுமே இல்லடா.! நின்னு பாரு.எவ்வளவு மனுசங்க இங்க வந்து போறாங்க தெரியுமா? கலைடாஸ்கோப்பில பார்க்கிற மாதிரி காட்சிக மாறிட்டே இருக்கும்.. போரே அடிக்காது.. விக்னேஷ்..!” என்றான்.

ப்ளஸ் டூ படிக்கிற போது பிறகு அவனிடம் மாற்றம் தெரிந்தது. மாற்றம் என்றால் சைட் அடிப்பதை நிறுத்திக் கொண்டு பரணி காதலிக்க ஆரம்பித்திருந்தான்.

அவன் காதலிக்கும் அந்த பெண்ணின் பெயர் மீனா என்றான். அவளை உயிருக்கு உயிராய் காதலிப்பதாய் சொன்னான். ஏதோவொரு கம்பெனியில் வேலை பார்க்கிறாளாம். பஸ் ஸ்டாண்டில் வைத்துத்தான் அவளை முதலில் பார்த்தானாம். முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாம். ஒரு முறை பரணி என்னிடம் சொன்னான். எனக்கு கோபம் கோபமாய் வந்தது. வேண்டாம் பரணி ப்ளஸ் டூ படிச்சு பாஸ் பண்ற வேலையை பாரு என்றேன். ஆனால் அவனது காதல் அவன் காதை அடைத்துக் கொண்டிருந்தது.

அந்த பெண்ணிற்காக நேரத்திலேயே போய் பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பான். அவளுடன் ஒரு கடை சந்தில் நின்று பேசுவான். பிறகு அவளை பஸ் ஏற்றி விடுவான். கை அசைப்பான். கண் கலங்கி நிற்பான். அவள் சாயந்திரம் பஸ்ஸில் திரும்பி வருவாள். மீண்டும் இருவரும் அதே சந்தில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது பள்ளிகூடம் முழுவதும் தெரிந்த காதல் கதை. நான் எதையும் கண்டு கொள்வதில்லை. எனக்கு படிக்க நிறைய இருந்தது.

ஒருநாள் பஸ் ஸ்டாண்ட் மூலையில் நின்று பரணி என்னிடம் கதறி அழுதான். காரணம் கேட்டேன். அவள் சொல்லாமல் கொல்லாமல் திடீரென கல்யாணம் செய்து கொண்டாளாம். தன் கணவனோடு இதே பஸ் ஸ்டாண்டில் ஊட்டி பஸ்ஸில் ஏறி டாட்டா காட்டி விட்டு போனாளாம். பரணி இதை தாங்க முடியவில்லை என்றான். தற்கொலை செய்ய போறேன் என்றான். நான் அவனது முதுகில் தட்டிக் கொடுத்து உளறாம பரிட்சைக்கு ஒழுங்கா படி என்றேன். அவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான்.

எல்லோரும் எதிர்பார்த்தபடி பரணி ப்ளஸ் டூவில் தேறவில்லை. மூன்று பாடத்தில் அவனுக்கு போயிருந்தது. அதற்கு பிறகு என் வாழ்க்கையில் யாரையும் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் நிறைய மாற்றங்கள் நடந்தது. எங்கள் வீடு சேலம் போனது. அங்கேதான் என் மேல் படிப்பெல்லாம் முடிந்தது. பிறகு ஒரு தனியார் வங்கியில் எனக்கு கிடைத்த வேலை. அதன் பிறகு மும்பையில் இரண்டு வருசம். விசாகபட்டினத்தில் மூன்று வருசம் என வருடங்கள் ஓடியது. ராஜேஷ் திருச்சியில் படித்து ஒரு பெரிய வேலையில் இருந்தான். பரணியைப் பற்றி எப்போதாவது தகவல் வரும். அவன் தபால் மூலம் பட்ட படிப்பு படிக்கிறானாம். அதற்கு பிறகு அவன் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் செய்தி கேட்டேன். இதுதான் நான் பரணியை பற்றி கேட்ட கடைசி தகவல். அதற்கு பிறகு யார் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் வாழ்க்கை ஓடியது. அதற்கு பிறகு எனக்கு நடந்த கல்யாணம். பிறந்த இரண்டு குழந்தைகள் என இருபது வருடங்கள் போனதே தெரியவில்லை. என் வங்கியில் மாற்றல் ஆகி சென்னை வந்தேன்.

சென்னைக்கு வந்ததும் நான் என் குடும்பத்தோடு மகாபலிபுரம் போக தி.நகர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன். பஸ் எத்தனை மணிக்கென என் மனைவி விசாரித்து வரச் சொன்னாள். நான் டைம் கீப்பர் அறைக்குப் போனேன். அங்கே பார்த்த காட்சியைதான் என்னால் நம்பவே முடியவில்லை. உள்ளே பரணிதான் உட்கார்ந்திருந்தான். அவன் முன்னால் ஒரு மைக் இருந்தது.

“பயணிகள் கவனத்திற்கு.. திருவல்லிகேணி வரை செல்லும் தடம் எண் 13 பணிமனை வாயிலிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்..” என்ற அவனது குரல் அந்த பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.