March 03, 2010

திருவல்லிக்கேணி, தடம் எண் 13

சரசுராம் - சிறுகதை
கல்கி - நவம்பர் 2009




வனை அந்த இடத்தில் பார்த்த போது என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு இடம் ஒரு மனிதனின் வாழ்க்கையை இவ்வளவு ஆக்கிரமிக்குமா? நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.

அவன் பரணி. பரணீதரன். அவனை நான் முதலில் சந்தித்தது ஆறாம் வகுப்பு படிக்கிறபோதுதான். அதுவும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் வைத்துதான் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. என்னை பஸ் ஏற்றி ஸ்கூலுக்கு அனுப்ப எங்கள் அம்மா பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தார்கள். பரணியும் நான் போகிற பஸ்ஸுக்காகத்தான் காத்திருந்தான். தனியாகத்தான் நின்றிருந்தான். கூட யாரும் வந்த மாதிரி தெரியவில்லை. இவ்வளவு தைரியமா? ஆச்சர்யமாய் அவனை பார்த்தேன். அவனும் என் பள்ளிதான் போலும்.அதே யூனிபார்மில்தான் இருந்தான். அம்மாதான் அவனிடம் முதலில் பேச்சுக் கொடுத்தார்கள்.

“ஏன் கண்ணு நீயும் மகாலிங்கபுர பள்ளிக்கோடத்திற்குதா போறயா?” என்றார்கள்.

அவன் நிமர்ந்து அம்மாவை பார்த்தான். ஆமாம் என்கிறமாதிரி தலையை மட்டும் ஆட்டினான்.

“விக்னேஷையும் கூட கூட்டிட்டு போறயா..கண்ணு?” என்றார்கள் அம்மா.

பரணி அதற்கும் சரி என்கிற மாதிரி தலையை ஆட்டினான். நானும் மறுப்பேதும் சொல்லவில்லை. அம்மா தைரியமாய் கிளம்பிக் கொண்டார்கள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் எங்கள் பஸ் வந்தது. பரணி சொல்லாமல் கொல்லாமல் திடீரென ஓடினான். கண்டக்டர் திட்ட திட்ட மின்னல் வேகத்தில் அந்த பஸ்ஸில் ஏறினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நிறைய கூட்டம் அவனை தொடர்ந்து ஓடியது. அடப்பாவி இப்படி விட்டுட்டு போயிட்டானே என்று நினைத்தபடி கடைசியாய் பஸ்ஸில் ஏறினேன். உள்ளே போக அவன் பின்னால் என் சட்டையை பிடித்து இழுத்தான். ஸ்கூல் பையை வைத்து எனக்காகவும் ஒரு இடம் போட்டிருந்தான். அப்படிதான் பரணி என் நெஞ்சில் இடம் பிடித்தான்.

இருவரும் ஒரே வகுப்புதான்.மதியம் சாப்பிடும் போது ஒன்றாய் சாப்பிட்டோம். அதற்கு பிறகு ஒவ்வொரு நாளும் பஸ் ஸ்டாண்டில் எனக்காக அவன் காத்திருப்பான். ஒவ்வொரு நாளும் ஓடிப்போய் பஸ்ஸில் எனக்காகவும் இடம் பிடித்தான். போகிற போது பஸ் டிரைவரிடம் தயக்கமின்றி அரட்டை அடிப்பான். பிடித்த பாடல் போடச் சொல்லுவான். அவன் ஒரு நாள் வராவிட்டாலும் கண்டக்டர் என்னிடம் விசாரிப்பார். அது மட்டுமல்ல பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பெட்டிக் கடையிலும் அவனுக்கு நட்பிருந்தது. கடன் சொல்கிற அளவுக்கு நட்பு. அவன் போன உடனேயே கடைக்காரர் கேட்காமலேயே அவனிடம் சுவிங்கத்தை நீட்டுவார்.

பரணிக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை. ஒவ்வொரு வருசமும் அவன் தேறும் போது அவனை விட எங்க வாத்தியார் அதிகம் ஆச்சர்யப்படுவார். விதி விலக்கில் தப்பித்துக் கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பு வரும் போது பரணி ஆளே மாறிப் போனான். லேசாய் மீசை முளைத்திருந்தது. பேச்சில் தொனி மாறியிருந்தது. தலை முடியை பெரியதாய் வளர்த்தி பின்புற பேண்ட் பாக்கெட்டில் சீப் வைத்திருந்தான். அவனுக்கென ஒரு குரூப் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும். அவனைவிட வயதில் மூத்த பையன்கள் அவனுக்கு நட்பாயிருந்தார்கள். என்னை முதலில் பஸ்ஸில் அனுப்பி விட்டு பிறகு வருகிறேன் என்பான். கொஞ்ச நாள் எனக்கு காரணம் புரியவில்லை. ராஜேஷ்தான் சொன்னான்.

“அவன் கேர்ள்ஸ் ஹைஸ்கூல் பொண்ணுகள சைட் அடிச்சிட்டு அப்புறம்தான் பஸ் ஏறிவான். அதுமட்டுமல்ல அவன் தம்மெல்லாம் அடிக்கறான்டா..” என்றான்.

என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாய் இருந்தது. ராஜேஷ் சொன்ன அடையாளங்களோடு பரணியை ஒருநாள் பார்த்தேன். கையில் தம். புகை நடுவே அவனது வெறித்தப் பார்வையில் அழகியப்பெண்கள். எனக்கு அவனை பார்க்க பயமாய் இருந்தது.

ஒருநாள் பஸ்ஸிற்கு காத்திருக்க திடீரென இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை கம்பு எடுத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தார்கள். ஆளுக்கொரு திசையில் நாங்கள் என்னவென புரியாமல் தலைதெறிக்க ஓடினோம். பரணி ஒரு டீக்கடைக்குள் ஓடி மறைந்தான். நான் பஸ் ஸ்டாண்டின் சைக்கிள் ஸ்டாண்டில் நுழைந்தேன். சுவற்றில் ஏறினேன்.செருப்பு நழுவியது. குதித்து ஓடினேன். கை கால்களில் சிராய்ப்புகளின் எரிச்சல். ராஜேஷ் மூச்சிறைக்க கொஞ்ச தூரத்தில் என்னுடன் வந்து இணைந்து கொண்டான். எனக்கு ஆறுதலாயிருந்தது. அவன்தான் போலீஸ் துரத்தின காரணத்தைச் சொன்னான்.

“பரணி குரூப்பெல்லாம் ஸ்கூல் புள்ளைகள சைட் அடிச்சு கலாட்டா பண்றத யாரோ போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்களாம். அதான் எல்லாத்தையும் விரட்டறாங்க..” என்றான்.

இந்த விஷயம் வீட்டிற்குத் தெரிய அம்மா என்னை துரத்தி துரத்திஅடித்தார்கள். இதுக்கு போலீஸ்கிட்டயே அடிவாங்கியிருக்கலாம். அவ்வளவு அடி. இனி பரணி கூட உன்னை பார்த்தேன். காலை உடச்சு அடுப்பில வச்சிருவேன் என்றார்கள்.

அதற்கு பிறகு நான் பரணியுடன் பேசுவதை குறைத்துக் கொண்டேன். பஸ்ஸில் கூடப் போவதையும் நிறுத்துக் கொண்டேன். எப்போதாவது பேசுவேன். அதற்கு பிறகும் அவனிடம் பெரிய மாற்றம் தெரியவில்லை. அவன் எப்பொழுதும் போல் பஸ் ஸ்டாண்டில்தான் நின்றிருந்தான். நான் கையை மட்டும் காட்டி விட்டு நகர்ந்து கொள்வேன். எப்போதாவது நிற்க நேர்ந்தாலும் கொஞ்சம் தள்ளியே நின்றுக் கொண்டேன். அவ்வப்போது அவனை கவனிப்பேன். பஸ் ஸ்டாண்டின் அத்தனை விஷயமும் அவனுக்கு அத்துபடியாய் இருந்தது. எந்த ஊருக்கு என்ன பஸ் என்பதையெல்லாம் விசாரிப்பவர்களுக்கு மிக சரியாக சொல்லுவான். அது எத்தனை மணிக்கு வரும். எத்தனை மணிக்கு கிளம்பும் என்பதுகூட அவனுக்கு மனப்பாடம்.

“இந்த ஞாபக சக்தி அவன் படிப்பில இருந்திருந்தா அவந்தான்டா நம்ம ஸ்கூல் பர்ஸ்ட்..” என்பான் ராஜேஷ்.

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயத்தல டேலண்டா இருப்பாங்க. அவன் இந்த விஷயத்தில் டேலண்ட்..” என்றேன்.

“என்ன டேலண்ட்? பிரயோஜனமில்லாத டேலண்ட்.. எப்பப் பார்த்தாலும் பஸ் ஸ்டாண்டில இருந்துட்டு.. பஸ் ஸ்டாண்ட் பரணின்னு பேரே வாங்கிட்டான். என்ன ஆகப் போறானோ தெரியல..”

ராஜேஷ் எப்போதும் வருத்தப்படுவான். எனக்கும் பரணி மேல் அந்த வருத்தம் உண்டு. ஒரு முறை அவனிடம் பேசிப்பார்த்தேன்.

“டேய்..பஸ் ஸ்டாண்ட் பத்தி உனக்கென்ன தெரியும்? இவ்வளவு சுவாரஸ்யமான இடம் வேற எதுவுமே இல்லடா.! நின்னு பாரு.எவ்வளவு மனுசங்க இங்க வந்து போறாங்க தெரியுமா? கலைடாஸ்கோப்பில பார்க்கிற மாதிரி காட்சிக மாறிட்டே இருக்கும்.. போரே அடிக்காது.. விக்னேஷ்..!” என்றான்.

ப்ளஸ் டூ படிக்கிற போது பிறகு அவனிடம் மாற்றம் தெரிந்தது. மாற்றம் என்றால் சைட் அடிப்பதை நிறுத்திக் கொண்டு பரணி காதலிக்க ஆரம்பித்திருந்தான்.

அவன் காதலிக்கும் அந்த பெண்ணின் பெயர் மீனா என்றான். அவளை உயிருக்கு உயிராய் காதலிப்பதாய் சொன்னான். ஏதோவொரு கம்பெனியில் வேலை பார்க்கிறாளாம். பஸ் ஸ்டாண்டில் வைத்துத்தான் அவளை முதலில் பார்த்தானாம். முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாம். ஒரு முறை பரணி என்னிடம் சொன்னான். எனக்கு கோபம் கோபமாய் வந்தது. வேண்டாம் பரணி ப்ளஸ் டூ படிச்சு பாஸ் பண்ற வேலையை பாரு என்றேன். ஆனால் அவனது காதல் அவன் காதை அடைத்துக் கொண்டிருந்தது.

அந்த பெண்ணிற்காக நேரத்திலேயே போய் பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பான். அவளுடன் ஒரு கடை சந்தில் நின்று பேசுவான். பிறகு அவளை பஸ் ஏற்றி விடுவான். கை அசைப்பான். கண் கலங்கி நிற்பான். அவள் சாயந்திரம் பஸ்ஸில் திரும்பி வருவாள். மீண்டும் இருவரும் அதே சந்தில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது பள்ளிகூடம் முழுவதும் தெரிந்த காதல் கதை. நான் எதையும் கண்டு கொள்வதில்லை. எனக்கு படிக்க நிறைய இருந்தது.

ஒருநாள் பஸ் ஸ்டாண்ட் மூலையில் நின்று பரணி என்னிடம் கதறி அழுதான். காரணம் கேட்டேன். அவள் சொல்லாமல் கொல்லாமல் திடீரென கல்யாணம் செய்து கொண்டாளாம். தன் கணவனோடு இதே பஸ் ஸ்டாண்டில் ஊட்டி பஸ்ஸில் ஏறி டாட்டா காட்டி விட்டு போனாளாம். பரணி இதை தாங்க முடியவில்லை என்றான். தற்கொலை செய்ய போறேன் என்றான். நான் அவனது முதுகில் தட்டிக் கொடுத்து உளறாம பரிட்சைக்கு ஒழுங்கா படி என்றேன். அவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான்.

எல்லோரும் எதிர்பார்த்தபடி பரணி ப்ளஸ் டூவில் தேறவில்லை. மூன்று பாடத்தில் அவனுக்கு போயிருந்தது. அதற்கு பிறகு என் வாழ்க்கையில் யாரையும் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் நிறைய மாற்றங்கள் நடந்தது. எங்கள் வீடு சேலம் போனது. அங்கேதான் என் மேல் படிப்பெல்லாம் முடிந்தது. பிறகு ஒரு தனியார் வங்கியில் எனக்கு கிடைத்த வேலை. அதன் பிறகு மும்பையில் இரண்டு வருசம். விசாகபட்டினத்தில் மூன்று வருசம் என வருடங்கள் ஓடியது. ராஜேஷ் திருச்சியில் படித்து ஒரு பெரிய வேலையில் இருந்தான். பரணியைப் பற்றி எப்போதாவது தகவல் வரும். அவன் தபால் மூலம் பட்ட படிப்பு படிக்கிறானாம். அதற்கு பிறகு அவன் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் செய்தி கேட்டேன். இதுதான் நான் பரணியை பற்றி கேட்ட கடைசி தகவல். அதற்கு பிறகு யார் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் வாழ்க்கை ஓடியது. அதற்கு பிறகு எனக்கு நடந்த கல்யாணம். பிறந்த இரண்டு குழந்தைகள் என இருபது வருடங்கள் போனதே தெரியவில்லை. என் வங்கியில் மாற்றல் ஆகி சென்னை வந்தேன்.

சென்னைக்கு வந்ததும் நான் என் குடும்பத்தோடு மகாபலிபுரம் போக தி.நகர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன். பஸ் எத்தனை மணிக்கென என் மனைவி விசாரித்து வரச் சொன்னாள். நான் டைம் கீப்பர் அறைக்குப் போனேன். அங்கே பார்த்த காட்சியைதான் என்னால் நம்பவே முடியவில்லை. உள்ளே பரணிதான் உட்கார்ந்திருந்தான். அவன் முன்னால் ஒரு மைக் இருந்தது.

“பயணிகள் கவனத்திற்கு.. திருவல்லிகேணி வரை செல்லும் தடம் எண் 13 பணிமனை வாயிலிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்..” என்ற அவனது குரல் அந்த பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

November 28, 2009

பாதியில் நின்ற பாடல்

இசை அமைப்பாளர் ஓவியன் பற்றிய சில நினைவுகள்

எந்த திருப்பத்தில் எதுவும் நிகழலாம் என்கிற மாதிரிதான் இந்த வாழ்க்கை. அந்த மாய நிகழ்வுகளின் சுவாரஸ்யம் சில சமயம் மொத்த வாழ்வின் மீதும் ஒரு வெறுப்பை உமிழ்ந்து விடுகிறது. ஒரு மனிதனை உச்சி வரை உயர்த்தி விட்டு சட்டென மேலிருந்து தள்ளி விடும் அதன் இயல்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த வாழ்க்கையின் க்ளைமாக்ஸ் மட்டும் ஏன் எப்போதும் சுபமாய் இருப்பதில்லை? விடையில்லா புதிராய் இதுயென்ன விளையாட்டு? இதுயென்ன கொடுமை? என இப்படியெல்லாம் எரிச்சலை சமீபத்தில் இசையமைப்பாளர் ஓவியனின் திடீர் மரணம் என்னுள் ஏற்படுத்தியது.

ஓவியன் அதிகம் உயரமில்லை. கருத்த தேகம். நிரந்தரமாய் முகத்தில் இருக்கும் இலேசான தாடி. நெற்றியில் சந்தனம் குங்குமம். அடர்த்தியாய் தலை முடி. எப்போதும் மிக இளமையாய் சுத்தமான உடை. கூட ஒரு சைக்கிள். அதற்கு அவ்வவ்போது மாறும் டிரைவர்கள். இதுதான் இசையமைப்பாளர் ஓவியன். நான் சென்னை வந்த சில நாட்களிலேயே மிக நெருக்கமான நண்பர் ஆனவர்களில் இவரும் ஒருவர். நண்பர் திரு.காந்தி மூலம் எனக்கு அவர் அறிமுகம். மிக சுலபமாக ஒட்டிக் கொள்ளும் இயல்பு. யதார்த்தமாய் அன்பை பொழியும் தன்மை. என அவரிடமிருந்த விசேச குணங்கள் அவர் மீது எனக்கு உடனடியாய் ஒரு ஈர்ப்பைத் தந்தது.

தேனாம்பேட்டை. நான் தங்கியிருந்த அறைக்கு முதல் முதலாய் அவரது பாடல்களை பாடிக்காட்ட வந்திருந்தார். கையில் ஆர்மோனியப் பெட்டி எதுவுமில்லை. அறையிலிருந்த எழுதும் அட்டையை மட்டும் எடுத்துக் கொண்டார். தரையில் அமர்ந்தார். அதில் தாளம் போட ஆரம்பித்தார். விரல் அந்த அட்டையில் விளையாட ஆரம்பித்தது. கண்களை மூடிக் கொண்டார். மிக சன்னமாக ஒலிக்க ஆரம்பித்த அவர் குரல் பிறகு பலமானது. ‘கண்ணனின் குழலோசை காதோரந்தான்.. வந்தது எனை தேடி நாள்தோறும்தான்’. இளையராஜாவை இலேசாய் ஞாபகப்படுத்தும் கட்டையான குரல்.

அவர் பாடப் பாட நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன். இந்தச் சின்ன உருவத்திற்குள்ளிருந்து இவ்வளவு அழகான பாடலா? இப்படியொரு வீச்சா? என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்தடுத்து நிறைய பாடல்களை பாடிக் காட்டினார். முடிந்ததும் நான் பாராட்டி விட்டு கேட்டேன். முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டீர்களா என்றேன். இல்லை எனறார். இலக்கியப் பரிச்சயம் உண்டா என்றேன். அதற்கும் இல்லை என்றே பதில் வர எனக்கு மேலும் ஆச்சர்யம் வந்தது. அப்புறம் எப்படி இவ்வளவு இயல்பாய் வந்து விழுகிறது பாடல்களும் அதற்கான வார்த்தைகளும்.! வாசகன் என்ற பெயரில் அறிமுகமான இசையமைப்பாளர் ஓவியன் ஒரு பிறவி கலைஞன் என்பதை உணர்ந்தேன். வந்ததும் இவ்வளவு திறமையான மனிதர்களை சந்தித்தபோதுதான் சென்னை மீது எனக்கு இன்னும் காதல் வந்தது.

ஓவியனின் தைரியம் இன்னும் ஆச்சர்யமானது. எந்த கம்பெனி என்று பார்க்க மாட்டார். எந்த தயாரிப்பாளர் என்று யோசிக்க மாட்டார். எவ்வளவு பெரிய இயக்குனர் என்றாலும் எந்தவித தயக்கமுமின்றி அவர்களை அணுகுவார். சுலபமாய் பேசுவார். இருக்கிற டேபிளில் தாளம் போட்டு உடனடியாய் பாடிக் காட்டுவார். அப்படி ஒரு நாள் இயக்குனர் பாரதிராஜாவிடம் பாடிக்காட்ட அவரும் அசந்து போனார். உடனடியாக அவர் ஒரு ஆர்மோனிய பெட்டியை வாங்கி பரிசாக தந்தார். அதைதான் ஓவியன் தன் கடைசி காலம் வரை வைத்திருந்தார். தனது ‘கருத்தம்மா’ படத்திற்கு ஓவியனை இசையமைப்பாளர் ஆக்கும் எண்ணத்திற்கும் அவர் வந்தார். அதற்காக பாடல்களை அவர் கேட்டிருந்தார். ஓவியனும் அதற்காக சில பாடல்களை கம்போஸ் செய்து வைத்திருந்தார். அதில் ‘அழகழகா ஆவாரம்பூ பூத்திருக்கு..’ என்ற பாடலை நாங்கள் இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறுதியில் அந்தப் படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த வாய்ப்பு ஓவியனுக்கு ஏன் அமையாமல் போனது என தெரியவில்லை. வியாபார ரீதியான காரணமா புரியவில்லை.


அதற்கு பிறகு உடனடியாய் ஓவியனுக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு மன்சூர் அலிகானின் ‘ராவணன்’ . அதற்கு பிறகு நடந்த அவரது காதல் திருமணம். சி.ஐ.டி நகரில் குடியிருப்பு. பிறந்த குழந்தைகள் என அவரது வாழ்க்கை பரபரப்பாகவே போனது. அதற்கு பிறகு கிடைத்ததுதான் இயக்குனர் நாகராஜின் ‘தினந்தோறும்’ படம். அதில் நான் உதவி இயக்குனர் என்பதால் ஓவியனுடன் இன்னும் நெருக்கமானேன். உதவி இயக்குனர்களும் திருப்தி ஆகும்வரை அவர் அதற்கு டியூன்கள் போட்டார். மாற்றம் சொல்லும் பாடல் வரிகளை எந்த ஈகோவும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார். நாங்கள் அனைவரும் ஒரு டியூனுக்கு எப்படி பாட்டு வரிகளை அமைப்பது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த படத்தில் வந்த ‘நெஞ்சத்தில் வெகு நாட்களாய்..’ என்ற பாடலும் ‘என் வானம் நீதானா..’ என்ற பாடலும் பரவலான கவனத்தை பெற்றது. அதில் சில பாடல்களை ஓவியனே எழுதியிருந்தாலும் அதில் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி அவர் எழுதியிருந்த ‘பட்டதாரிதான்..’  என்ற பாடல் குறிப்பிடத் தகுந்தது. கதைப்படி கதாநாயகி சுஜாதாவின் ரசிகை. அது தெரிந்து கதாநாயகன் அவளது காதல் வேண்டி அந்த புத்தகங்களை தேடித்தேடி தருவதாக சூழல். அந்த பாடலை சுஜாதாவே ரசித்தார். அதுதவிர அந்தப் படத்தின் விமர்சனத்தை சுஜாதாவே குமுதத்தில் எழுதினது இன்னும் சிறப்பு.

’தினந்தோறும்’ படம் வெற்றிப் பெற்றது. அதன் பின்னணி இசை பாடலை விட அதிகம் பேசப்பட்டது.
ஆனாலும் ஓவியனுக்கு ஏன் பெரியதாய் வாய்ப்புகள் தேடி வரவில்லை எனத் தெரியவில்லை. அதில் அவருக்கு நிறைய வருத்தம் இருந்தது. அதற்குப் பிறகு அவருக்கு திரு.மன்சூர் அலிகானே மீண்டும் தன் ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ படத்தில் வாய்ப்பளித்தார். மற்றும் வெங்கட்பிரபு நடித்த ‘வசந்தம் வந்தாச்சு’ என்ற படத்திற்கும் இசையமைத்தார். ஆனாலும் அவர் வாழ்வில் வசந்தம் வரவில்லை. தனக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காதது, நல்ல இயக்குனர்களிடமிருந்து வாய்ப்பு வராததும் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்திருந்தது. அதுதவிர குடும்பத்தை சென்னையில் நடத்த முடியாமல் தன் சொந்த ஊருக்கே அனுப்பியிருந்தார். இந்த போராட்டங்கள், அதன் வலிகள், மன உளைச்சல்கள் அவரின் குடிப்பழக்கத்தை அதிகமாக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இடையில் ‘தெய்வாமிர்தம்’ என்ற பக்திப்பாடல்களின் ஆல்பம்,  ‘அவளுகென்று ஒரு வானம்’ போன்ற சில தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்தார். ஆனாலும் தான் நினைத்த இடத்தை அடைய முடியாத வருத்தம் அவரை அழுத்திக் கொண்டே இருந்தது. எப்போது என்னை சந்தித்தாலும் நாம் இணைந்து ஒரு நல்ல படத்தை தரவேண்டும் ராம் என்பார்.

நான் ஓவியனை கடைசியாக சந்தித்தது கடந்த செப்டம்பரில்தான். ‘பரிமளா திரையரங்கம்’ என்ற அவரது புதிய படத்தின் கதை விவாதத்திற்கு என்னையும் திரு.காந்தி அவர்களையும் அழைத்திருந்தார். இந்த படம் எனக்கு நல்ல திருப்புமுனையை தரும் என மிக நம்பிக்கையோடு எங்களிடம் சொன்னார்.  நாங்கள் ஹோட்டலில் சாப்பிட்டோம். ஓவியன் சாப்பிட்ட அளவு ஒரு குழந்தை சாப்பிடுவதை விடவும் குறைவாகவே இருந்தது. மற்றும் தொடர்ந்து சிகரெட். அவருக்கு எப்போதும் திடகாத்திர உடம்பு இல்லை என்றாலும் இருக்கிற உடம்பை காப்பாற்றிக் கொள்ள எச்சரித்தோம். அந்த படத்தின் பாடல்களை எங்களுக்கு போட்டு காட்டினார். நன்றாகவே வந்திருந்தது. இன்னும் அதற்குள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்றார். மேலும் நாங்கள் சொன்ன கருத்துக்களை கேட்டுக் கொண்டார். நாங்கள் கை குலுக்கி விடை பெற்றோம். அதுதான் நாங்கள் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று அப்போது எனக்கு தெரியாது. அந்த கை குலுக்கலில் இருந்த கடைசி உஷ்ணம் என் கையிற்குள் இன்னும் இருப்பதாக உணர்கிறேன். கடந்த தீபாவளி முடிந்து மீண்டும் தன் சொந்த ஊரான மொரப்பூருக்கு போனார். அங்கே திடீர் நெஞ்சு வலியின் காரணமாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது.

அவருக்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள். ஓவியன் பெரியதாய் சம்பாதிக்காத நிலையில் அவரது குடும்பத்தின் எதிர்காலம் மிக பெரிய கேள்விக் குறியாய் நிற்கிறது. ஓவியனின் நாற்பத்தி இரண்டு வருட உழைப்பு அவர்களது குடும்பத்தின் அடுத்த வேளை உணவிற்குக்கூட உதவாமல் போன சோகத்தை என்னவென்று சொல்வது?

ஓவியன் ஒரு நல்ல இசைஞன். அற்புதக் கலைஞன். ஆழமான ரசிகன். கிட்டதட்ட 1000 பாடல்களுக்கு டியூன் போட்டு தன் டைரியில் எழுதி வைத்திருந்தார். அந்த பாடல்கள் பதிவாகாமலே இயற்கையோடு கலந்து விட்டது. திறமை இருந்தும் அது அறியப்படாமலேயே போகும் சோகத்தை என்ன சொல்வது? நினைத்ததை அடைய முடியாமல் பாதியில் நின்று போகும் பயணங்களை என்னவென்பது? இந்த வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல. கொஞ்சம் கொடூரமானதும்கூட. ஆனாலும் வேறு வழியில்லை. அதன் சுவாரஸ்யத்தைத் தேடி நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அந்த சுவாரஸ்யத்தில் ஒன்றாய் ஓவியனின் பாடல்கள் என்றும் என் (நம்) காதோரம்தான்.

ஓவியனின் பாடல்களைக் கேட்க:
1. தினந்தோறும்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு


November 02, 2009

கொரியன் படங்கள் நமஹ..!

சினிமா ஒரு எழுத்தாளராய் இருந்து எழுதுகிற மாதிரி சுதந்திரமானதல்ல. சிறுகதை மாதிரி நாமே யோசித்து நாமே எழுதி நாமே நமக்கு நாமே தோளை தட்டி ‘சூப்பர் மாப்பிள்ளே' என்று பாராட்டி அனுப்புகிற சமாச்சாரமும் அல்ல சினிமா. இது ஒரு கூட்டு முயற்சி என்றே பழக்கப்பட்டிருக்கிறது. எந்த இயக்குநரும் இதுதான் கதை என்றோ இதுதான் திரைக்கதை என்றோ அல்லது இந்த உணர்வுக்கு இந்த ஷாட்தான் வைக்க வேண்டுமென்ற தொழில் நுட்பங்களையோ அல்லது அதன் சினிமா மொழியோ சொல்லித் தருவதில்லை. ஆனால் இலக்கியத்தை பொறுத்தவரை சிறு சிறு குழுக்களாக இயங்கினாலும் அடிக்கடி பகிர்தல் கூட்டங்கள், விவாத சந்திப்புகள் நடக்கும். அதுதவிர நீங்கள் விருப்பப்பட்டால் பிரபஞ்சன், கோணங்கி, சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் என நீங்கள் பெரியதாய் நினைக்கிற எந்த எழுத்தாளர்களையும் சுலபமாய் சந்திக்க முடியும். அவர்களுடன் கலந்துரையாட முடியும். இலக்கியத்தின் எந்த சந்தேகங்களையும் அவர்களிடம் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் சினிமாவை பொறுத்தவரை அதற்கு சாத்தியமே இல்லை. இயக்குநர்கள் சங்கரையோ, மணிரத்னத்தையோ அவ்வளவு சுலபமாய் சந்திக்க முடியுமாயென்ன? கலந்துரையாட முடியுமாயென்ன? காரணம் இங்கே பணமே பிரதானம். பணம் இருந்தால் எதையும் தெரிந்து கொள்ளலாம். சினிமா இங்கே அரசாங்கத்தின் விருதின் போது கலையாக மாறிவிடும். மற்ற சமயத்தில் அது வியாபாரமாகவே இருக்கும். ஆகவே நண்பர்களோடு பகிர்ந்துக் கொண்டே சினிமாவைக் கற்றுக் கொள்ள முடியும். நிறைய படங்கள் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும்.



தமிழ் படம் பார்த்து தமிழ் படம் எடுத்தது ஒரு காலம். இப்போது அது உலக சினிமாக்கள் பார்த்து தமிழ் சினிமா எடுக்கப்படுவதாய் பரிமாணம் பெற்றிருக்கிறது. கையில் ஒரு உலக சினிமாவாவது இல்லாமல் எந்த உதவி இயக்குநரையும் சந்திக்க முடிவதில்லை. அறைகளிலும் வீடுகளிலும் அவர்களது ஷெல்ஃப்களில் புத்தகங்களை விட உலக சினிமாக்களே இப்போது அதிகம் அடுக்கப்பட்டிருக்கிறது. அகிரா குரோசவாவும், ரோமன் பொலன்ஸ்கியும், இங்மர் பெர்க்மெனும் இப்போதைய தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள் வாய்களில் பாலசந்தர், பாரதிராஜாவை விட அதிகம் புழங்குகிறார்கள். மகிழ்ச்சியான மாற்றம்தான். மிக சந்தோசமான வளர்ச்சிதான். அவர்களின் திரை மொழி, அதற்கு பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இங்கே அவர்களின் கதையைக் கூட அப்படியே பயன்படுத்தும் போக்குகள்தான் அதிர்ச்சியாய் இருக்கிறது.

மிக பெரிய இயக்குநர்களே அந்த தவறை எந்த கூச்சமும் இல்லாமல் செய்கிறபோது வருங்கால இயக்குநர்களை என்ன சொல்வது? அதற்கு சமீபத்திய உதாரணம் A.R.முருகதாஸின் ‘கஜினி' (தமிழ்-ஹிந்தி) -யைச் சொல்லலாம். (ஹிந்தியில் சக்கைப்போடு போட்டு 300 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம்). அது. இயக்குநர் Christopher Nolan -ன் Memento -வின் காப்பி எனலாம்.சமீபத்தில் வெற்றி பெற்ற வெங்கட் பிரபுவின் ‘சரோஜா', Stephen Hawkins-ன் ஹாலிவுட் படமான ‘Judgment Night'-ன் அப்பட்டமான காப்பி.

அதே போல் சமீபத்தில் சொதப்பிய விஷ்ணுவர்தனின் ‘சர்வம்' என்னும் திரைப்படம் Alejandro Gonzalez Inarritu -வின் 21 grams என்ற படத்தின் தழுவல் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். கேட்டால் ‘Inspiration' என்கிறார்கள். செய்கிற தவறுக்கு சப்பைக்கட்டாய் ஒரு வார்த்தை ‘Inspiration'. அதுவும் ஆங்கில வார்த்தை.

சிறந்த படங்களின் உத்திகளை எடுத்து பயன்படுத்துவதைக்கூட தொழில்நுட்பமாய் நினைத்து மன்னிக்கலாம். இயக்குநர் Tom Tykwer -ன் Run Lola Run (German) மற்றும் Kieslowski -ன் Blind Chance -ன் உத்திகளை பயன்படுத்தி இயக்குனர் ஜீவா 12B எடுத்து சூடு போட்டுக் கொண்டாலும் அந்த முயற்சி பாராட்டப்பட்டது.  இயக்குநர் சேரன் உலக படங்களின் சில அழகான உத்திகளை மட்டும் எடுத்து மிக சரியாக நம் வாழ்க்கையோடு பயன்படுத்துவார். Zhang Yimou வின் The Road Home படத்தில் இருந்து வரும் சில காட்சிகளின் தன்மைகள் ஆட்டோகிராப்பிலும், தனது தவமாய் தவமிருந்தில் Live காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் Flashback காட்சிகள் கலரில் வருவதும் இந்த படத்தின் உத்திகளே. ஆனால் 1941-ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான Orson Welles -ன் Citizen Cane எனும் படத்தின் அற்புதமாய் கதை சொல்லும் அந்த உத்தியை நம் தமிழில் இதுவரை யாரும் கையாண்டதில்லை என்பது வருத்தமான விஷயமே.

தற்போது வருங்கால இயக்குநர்களின் ஆதர்சமான படங்களாய் இருப்பது கொரியன் படங்களே. இதன் பாதிப்பு Swine flu-வை விடவும் வேகமாய் பரவி வருகிறது. DVD கடைகளிலும் இதுவே பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கென்று தனி விலையை சில கடைகள் நிர்ணயிக்கின்றன. சென்னை திரைப்பட விழாகளிலும் கொரியன் படங்கள் போடும் போது அரங்கு நிறைந்து விடுகிறது. பூனையின் குரலாய் அதன் மொழியின் பாதிப்பு கூட படம் பார்ப்பவர்களிடம் நெடுநேரம் ஒட்டிக் கொள்கிறது. வெளியே வந்து ‘ட்ட்ட்டீ.. சசசாப்பிட வ்வ்வர்றீங்களா..' மாதிரியான கொரியன் உச்சரிப்பில்தான் கூப்பிடுகிறார்கள். கொரியன் படங்களில் இருக்கும் குடும்ப அமைப்பும் தாயின் மீதான அவர்களின் மதிப்புகளும் நம் சினிமாவையே அதிகம் ஒத்திருக்கிறது. அது தவிர அதன் பெரும்பான்மை படங்களில் ஆக்ரமித்திருப்பவை காதல் கதைகளே. தமிழ் சினிமாவில் எந்த கதையானாலும் அதை காதல் வழியாகவே சொல்கிறார்கள் அல்லது சொல்ல வேண்டியிருப்பதால் கொரியன் படங்கள் எளிதாக களவாடப் பயன்படுகிறது.


கொரியன் படங்களை நமது இலக்காக வைத்து இயங்குவது சரியா எனத் தோன்றவில்லை. அதை நமது சினிமாவின் அடுத்த version என்று வேண்டுமானால் சொல்லலாம். ஹிந்தி படங்கள் அதற்கு இணையாக வரத் தொடங்கி விட்டன.  ஈரான், இத்தாலி, லத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் படங்கள் வளர்ச்சியை யோசிக்கையில் நாம் ஐம்பது வருடங்களாவது பின்தங்கியிருக்கிறோம் எனலாம்.
Vittorio De Sica-வின் 'The Bicycle Thief' (1948), François Truffaut-வின் ‘The 400 Blows' (1959) மாதிரி இந்த வாழ்க்கையை வேறொரு தளத்திலிருந்து அணுகி சினிமா கலையின் உன்னதமான இடத்தை தொட்ட இந்த நியோ ரியலிஸ படங்கள் மாதிரிகூட வேண்டாம். அதே கொரியன் இயக்குனர்கள் kim ki tuk-ன் ‘Four season' (Spring, summer, fall, winter and spring), Im-kwon-Taek -ன் 'Painted Fire', Jeong-Hyang -ன் 'The way Home' மாதிரி படங்களை நாம் இலக்குகளாக எடுத்துக் கொள்ள வேண்டாமா?

ஆனால் தமிழ் சினிமாவில் நான் சந்தித்த வட்டத்திலிருந்து யோசித்தால் அதற்கான சாத்தியம் மிக குறைவு என்றே தோன்றுகிறது. சமீபத்தில் நான் எனது சினிமா நண்பரின் அறைக்கு போனேன். எதிர்பார்த்தது போலவே அவரது அறையில் உலக படங்கள் நேர்த்தியாய் அடுக்கிய ஷெல்ப். அதிலிருந்த ஒரு படத்தை எடுத்து பார்த்தேன். அது கொரியன் படமான ‘My Sassy Girl'. பார்த்துட்டு தரட்டுமா என்றேன். அது மட்டும் வேண்டாம் என்றார். ஏன் என்றேன். அதை வைத்து ஒரு script பண்ணியிருக்கிறேன் என்றார். நான் சிரித்துக் கொண்டு அதை அவரிடம் திரும்பி தந்துவிட்டேன். இப்படிதான் இருக்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.

நிறைய நண்பர்களிடம் நான் கதை கேட்டிருக்கிறேன். எழுதுகிற ஆள் என்பதால் அந்த வாய்ப்பு எனக்கே அதிகம் வாய்க்கிறது. என் நண்பர்கள் கிண்டலாய் சொல்வார்கள். ‘இவ்விடம் கதைகள் நல்ல முறையில் பழுது பார்த்து தரப்படும் என ஒரு போர்ட் வச்சிரேன்.' என்பார்கள். கதை கேட்கவும் திறமை வேண்டும். பொறுமை வேண்டும். அந்த அனுபவம் சில சமயம் தூக்கம் கெடுக்கும். பல சமயம் தூக்கம் கொடுக்கும். எனக்கு காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷிடம் மாட்டக் கொள்ளும் பாலைய்யா மாதிரி அனுபவங்கள்தான் ஏராளம்.

அப்படி சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு கதை சொன்னார். அந்த கதையில் ஹீரோவை படத்தின் ஆரம்ப கட்டத்திலிலேயே சிலர் கடத்துகிறார்கள். அவனை ஒரு அறையில் போட்டு பூட்டுகிறார்கள். அவனுக்கு ஊசி போட்டு மயங்க வைத்து உடைகள் மாற்றப் படுகிறது.  பிறகு அவன் தெளிந்த பிறகு அவனுக்கு உணவு அளிக்கப்படுகிறது. இது தொடர்ந்து அவனுக்கு 10 வருடத்திற்கும் மேலாக நடக்கிறது என்றார். கேட்டதும் எனக்கு இந்த கதையை எங்கேயோ பார்த்திருக்கிறோமே கேட்டிருக்கிறோமே எனத் தோன்றியது. பிறகு ஞாபகம் வந்தது. படம் : Old Boy. நாடு: கொரியா.

மேலும் கதை தொடர்ந்தது. அந்த கதாநாயகன் தன் flashback ஐ சொல்கிறான் அதில் வரும் காதல் காட்சியில் அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். தீவிர காதலின் ஒரு கட்டத்தில் அந்த பெண் ஒரு விபத்தில் இறந்து போகிறாள். ஆனால் சாகிற தருவாயில் அவள் சொல்கிறாள். ‘நான் சாகமாட்டேன். உன்னை சுற்றியே இருப்பேன். காற்றாய் இருப்பேன். காற்றாய் தொடர்வேன் என்கிறாள். அது மாதிரியே அவள் செத்த பிறகு ஒரு காற்றாடியாய், ஒரு பட்டமாய், ஒரு பலூனாய், மற்றும் பல காற்றின் அசைவுகளில் அவள் அவனை சுற்றி சுற்றி வருகிறாள்.



அதை அவர் சொல்ல சொல்ல இதையும் எங்கயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. அந்த படம்: Wind Struck. நாடு: கொரியா.

பிரச்சனைகளின் முடிவில் கதாநாயகனும் வேறொரு கதாநாயகியும் மின்மினிகளின் பின்னணியில் ஒன்று சேர்வதாய் கதை முடிந்தது. இந்த காட்சியும் அவரின் சொந்த கற்பனை அல்ல. இந்த காட்சியின் படம்: The Classic. நாடு: கொரியா.


கதை சொல்லி முடித்ததும் எப்படியிருக்கிறது என்றார். என்ன சொல்வது? நான் இயக்குநர் Kim-Ki-duk -க்கையும், இயக்குநர் Jae-young Kwak -யும்தான் பாராட்ட வேண்டும் என்றேன். அவர் அதிர்ச்சியோடு ஏன் என்றார்? உங்களை சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றேன். அதற்கும் புரியாமல் பார்த்தார். நான் சற்று கோபமாகவே சொன்னேன். கிரியேட்டிவிட்டி என்பது ஒரு பயிற்சி. அதற்கு நாம் தீனி கொடுக்க கொடுக்கத்தான் அது நமக்காக வேலை செய்யும். உங்களுக்கு வயது இருக்கிறது அதை இழந்து விடாதீர்கள் என்றேன். நம் வாழ்க்கையில் நம் சுற்றிலுமே நிறைய கதைகள் இருக்கின்றன. அதிலிருந்து கதைகள் எடுத்து படங்கள் பண்ணினாலே காலத்திற்கும் தீராது என்றேன்.  துவக்கத்திலிருந்தே இந்த விதமாய் பழகிக் கொள்ளாதீர் என்றேன். அவர் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார். சரி இதெல்லாம் தொகுத்து படம் பண்ணினால் படத்தில் அந்த இயக்குநர்களின் பெயர்களை போடுவீர்களா என்றேன். எதுக்கு என்றார். ஒரு நியாயம்தான். ‘பூ' படத்தில் இயக்குநர் சசி சீனா படமான 'Road Home' படத்திலிருந்து சில காட்சிகளையும் அதன் இசையையும்  பயன்படுத்தியதற்காக நன்றி கார்ட்டில் ‘Zhang Yimou’ வின் பெயரை போட்ட மாதிரி போடுவீர்களா என்றேன். போடலாமே என்றார். அப்படீன்னா நான் சொல்ற இந்த வரிகளையும் உங்கள் டைட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றேன். சொல்லுங்கள் என்றார். நான் Kim ki-duk-ம், Jae-young Kwak -ம் மன்னிக்க என்றும் போடுங்கள் என்றேன்.

September 02, 2009

‘பஞ்ச்’ டயலாக்கில் மாட்டிக்கொண்ட பெண்கள்

தமிழ் சினிமாவில் பெண்கள் பற்றிய ஒரு அலசல்
1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் சினிமாவிற்கு வயது கிட்டதட்ட எண்பது ஆகிறது. முதல் பேசும் படமான காளிதாஸில் ஆரம்பிக்கிறது நமது சினிமா வரலாறு. இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள். வருடத்திற்கு ஐநூறு கோடிக்கும் மேல் பணம் புரளும் இடம். தமிழ் நாட்டிற்கு நான்கு முதல்வர்களையும் தந்திருக்கிறது. நம் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இந்த சினிமாதான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் பொதுவான பேச்சாய் சினிமாவாகத்தான் இருக்கும். இப்போது சின்ன திரையும் சினிமாவை நம்பியே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறது. எல்லா விசேச தினங்களையும் அதுதான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. வேறென்ன செய்கிறது?

சினிமா ஒரு படைப்பாய், ஒரு கலையாய் அதன் ஆளுமை தமிழ் சினிமாவில் என்ன செய்கிறது? அத்தனையையும் மொத்தமாய் பேசிவிட முடியாது. தமிழ் சினிமா பெண்களை எப்படி காட்டிக் கொண்டிருக்கிறது? நம் இந்திய சினிமாவும் உலக சினிமாவும் காட்டின பெண்களில் ஒரு பகுதியையேனும் நம் சினிமா காட்ட முயன்றிருக்கிறதா? அதுதான் இங்கே பெரிய கேள்வியே.

ஆரம்ப காலங்களில் வந்த புராண படங்கள். அதில் வந்த பெண்கள். அந்த சத்தியவான் சாவித்திரியையும், பத்தினி பெண்களையும், கணவனே கண் கண்ட தெய்வங்களையும் விட்டுவிடுவோம். பெண்களை வெறும் குடும்பம் தாங்கிகளாக மட்டுமே காட்டிக்கொண்டிருந்த குடும்ப விளக்குகளையும், தெய்வ பிறவிகளையும், மாதர்குல மாணிக்கங்களையும் மன்னிப்போம். இந்த மிகப் பெரிய அறிவியலின் வீச்சுகள் புரியாமல் முடிந்துவிட்ட சோதனைகள் எனலாம். அதற்கு பிறகு அதன் அசுர பலம் புரிந்தவர்கள் அதை தங்கள் அரசியல் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்கள். அவர்கள் கட்சியின் கொள்கை பரப்பும் பிரச்சார களமாகவே சினிமா இருந்தது. சில முற்போக்கு கருத்துக்கள் அதுவும் ஆண் வாயிலிருந்தே தெரிந்துக் கொள்ளும் விதமாய் வெளிப்படுத்தினார்கள்.

1954 ல் வெளிவந்த ‘அந்த நாள்’ அந்த சமயத்தில் வந்த ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் ரஷோமானின் பாதிப்பில் வந்தது. என்றாலும் அது முதலில் ஒரு பெண்ணின் கையில் துப்பாக்கியை தருகிறது. நாட்டிற்கு எதிராய் துரோகம் செய்யும் தன் கணவனை சுடச் செய்தது. மணாளனே மங்கையின் பாக்கிய காலத்தில் அது ஒரு பெண் எடுத்த துணிச்சலான முடிவென்றே சொல்லலாம். ஆனால் அந்த துணிச்சல் அந்த படத்தோடு நின்று போனது. மீண்டும் மாலா ஒரு மங்கள விளக்கு, மாமியார் மெச்சிய மருமகள், பெண் குலத்தின் பொன் விளக்கு, மாதர்குல மாணிக்கம், தெய்வ பிறவி என்றே படங்கள் வந்து குவிந்தன. மீறி வந்தால் சித்தூர் ராணி பத்மினி மின்னல் வேகமாய் கத்தி சுழற்றுவாள். கன் பைட் காஞ்சனா, ரிவால்வர் ரீட்டாவும் துப்பாக்கியில் மிரட்டுவார்கள். ஜக்கம்மா குதிரை தாண்டுவாள். அத்தனையும் மிகைப்படுத்தப்பட்ட கதாநாயக சாகசங்களோடே வந்த திரைப்படங்கள். பெண்கள் பெயரிலேயே படங்களின் பெயர் வைக்கப்பட்டது, அவர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது போல் காட்டப்பட்ட படங்கள் அவர்கள் மீதான அக்கறையில் செய்யப்பட்டவைகள் அல்ல. அவைகள் பெண்களை திரையரங்களுக்குள் வரவைக்கும் உத்தியாகவே பயன்படுத்தபபட்டன. வியாபாரிகளிடம் மாட்டிக்கொண்ட சினிமாவில் என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்கள் பெண்களை தேவையென்றால் தெய்வமாக்குவார்கள் இல்லையென்றால் தெருவில் போட்டு மிதிப்பார்கள். அது அவர்களின் அக உலகங்கள் அவர்களின் பிரத்யேக வாழ்நிலை ஆசைகளையோ அலசிப் பார்க்கும் அக்கறை அவர்களுக்கு எதற்கு?

1969 - ல் துலாபாரம் (மூலம் மலையாளம்) வந்தது. கதை தோப்பில் பாசி. இயக்கம் வின்செண்ட். அப்போது கேரளாவில் வளர்ந்து வந்த பொது உடைமை இயக்கத்தின் தொழிற்சங்கங்களை கொச்சைப்படுத்தவே இந்த படம் எடுக்கப்பட்டதாக கடும் விமர்சனத்திற்கு ஆனது. நிறைய மொழிகளில் எடுக்கப்பட்டது. கதை திடீரென கணவன் இறந்து போக வாழ்கையை எதிர்கொள்ளும் கதாநாயகியையும் அவளது குடும்பத்தையும் பற்றியது. நடிகை சாரதாவிற்கு தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது. ஆனால் அதில் கதாநாயகி படித்த பெண்ணாய் இருந்தும் கணவனுக்கு பிறகான வாழ்கையை எதிர் கொள்ள முடியாமல் வறுமையின் உச்சகட்டத்தில் தன் குழந்தைகளை தானே கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சிப்பாள். இந்த படம் தன்னம்பிக்கை இல்லாமல் பெண்களை பலவீனப்படுத்தி பரிதாபத்திற்குரியவள் ஆக்கி அசிங்கப்படுத்தியது. ஆனால் ராஜாஜியின் கதையில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974 ல் வெளி வந்த திக்கற்ற பார்வதியில் துணையை இழக்கும் நாயகி தனக்கு வரும் துன்பங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வாள்.

அந்த சமயத்திலும் கதாநாயகர்களிடம்தான் மாட்டியிருந்தது இந்த கலை. அவர்கள் சொல்லுதலே சமூகத்தின் விதியாகவும் மாறிக்கொண்டிருந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள என்று பாடிக்கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு கோட்பாடுகள் சொல்லுவார்கள். ஆண்களுக்கு அப்படி எதுவும் இருக்காது. அந்த உரத்த குரல்களுக்கு பெண்களும் சேர்ந்து யோசிக்காமல் கை தட்ட பட்டிக்காடா பட்டணமா, பூவா தலையா, அத்தையா மாமியா போன்ற பிற்போக்கு படங்கள் வரத்தொடங்கின.

அந்த சமயத்தில் மத்திய தர மக்களின் பிரதிநிதியாக இயக்குனர் பாலச்சந்தர் வந்தார். நாடகத்தன்மைகளை கழற்றி எறிய ரொம்பவே சிரமப்பட்டார். சினிமா மொழி அவரிடம் பலவீனமாய் தெரிந்தாலும் அவரது இயக்கத்தில் 1973 ல் வெளிவந்த அரங்கேற்றமும், 1974 ல் வெளி வந்த அவள் ஒரு தொடர்கதையும் குறிப்பிட வேண்டிய படமாகவே இருக்கிறது. அவைகள் நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்கள் சுயநலன்களுக்காக பெண்களை எப்படி சுரண்டித் தீர்க்கின்றன என்பதை தெளிவாகவே காட்ட முயற்சித்தன எனலாம். ஆனால் அதில் அரங்கேற்றத்தின் முடிவு இயக்குனரின் வியாபார பயத்தை காட்டியதே தவிர பெண்ணின் மீதான சமூக அக்கறையாக வெளிப்படவில்லை. அதே வருடம் வெளிவந்த சூரியகாந்தி படம் வேலைக்கு போய் சம்பாதிக்கும் பெண்ணை பற்றியும் அதனால் அவள் கணவனுக்கு ஏற்படும் ஈகோவைப் பற்றியும் பேசியது. இதன் தொடச்சியில் முக்கிய காலகட்டமாக 1977 மற்றும் 1978 ஐச் சொல்லலாம். கற்பு நிலையை சாதாரணமாக்கின ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்கம் பீம்சிங்), ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சித்தரிக்க முயன்ற பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள் (இதன் முடிவும் பலவீனமானது) இவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்த சமயத்தில் மிக முக்கிய படமாய் ருத்தரய்யாவின் அவள் அப்படித்தான் (1978) வந்தது. கதை அமைப்பிலும் அதை காட்சி படுத்தியதிலும், வசனத்திலும் மிக சிறப்பாய் வந்த படைப்பாய் இதை கொண்டாடலாம். வசனம் எழுத்தாளர் வண்ணநிலவன். இவரை இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பெரியதாய் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரியாத புதிர். அந்த வருத்தத்தை பிறகு பார்ப்போம். அவள் அப்படித்தான் மஞ்சு கதாபாத்திரம் வியப்பானது. ஆச்சர்யங்கள் நிறைந்தது. மிக துணிச்சலானது. மிக வெளிப்படையாய் தன் சுயத்தோடு தன் அறிவோடு இருக்க நினைக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி கேவலமாய் பார்க்கிறது என்பதை மிக தெளிவாய் சொல்ல நினைத்த தமிழ் படம் இதுதான். புத்திசாலி பெண்ணை ஏற்க மறுக்கும் ஆணின் பயம் தெளிவாய் வெளிப்பட்டிருந்தது. அந்த யதார்த்தம் அந்த திரைப்படத்தின் கடைசி காட்சியிலும் இயக்குனர் அழகாய் சொல்வார்.

கமலஹாசன் அவரது புது மனைவியுடன் காரில் வர மஞ்சு அவர்கள் அருகில் அமர்ந்திருப்பாள். மஞ்சு மெதுவாய் அந்த புது பெண்ணிடம் கேட்பாள்.
“பெண்கள் சுதந்தரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்..”

அவள் சற்று குழப்பமாகி விட்டு பதில் சொல்லுவாள்.

“எனக்கு அதப்பத்தி எதுவும் தெரியாது..”

மஞ்சு சிரித்தபடி பதில் சொல்லுவாள்.

“அதனாலதான் நீ சந்தோசமாக இருக்கிறாய்..”

இன்றுவரை கூட இந்த அளவு பெண்ணின் மிக நேர்மையான எதார்த்தமான பக்கங்களை காட்டின படம் வந்ததில்லை எனலாம்.

இதற்கு பிறகு பாலுமகேந்திராவின் வீடு படத்தைச் சொல்லலாம். நடுத்தரவர்க்கத்தின் வீடு கட்டும் சராசரி ஆசையையும், அதற்கான சிக்கல்களையும் அதற்கான இழப்புகளையும் வருத்தங்களையும் ஒரு பெண்ணின் மூலமாய் நன்றாக வெளிப்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா. அதில் அந்த கதாபாத்திரம் சராசரி கதாநாயகிகளின் எந்த அலங்காரத்திலும் இல்லாமல் நம் வீட்டருகில் பார்க்கிறமாதிரி இயற்கையாய் இருந்தாள். பிறகு பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை (சரிதா), நிழல் நிஜமாகிறது (சுமித்ரா), காதலுக்காகவே அதிகபட்சம் பெண் கதாபாத்திரங்களை படைத்திருந்தாலும் பாரதிராஜாவின் புதுமைபெண்ணையும் (தலைப்பு சற்று நெருடலாய் இருந்தாலும்), பெண் சிசு கொலைகளை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தின கருத்தம்மாவையும் குறிப்பிட வேண்டிய பெண்கள் பற்றிய படைப்புகள் எனலாம். இயக்குனர் துரையின் பசி, பெண்ணின் ஒருதலைக் காதலைச் சொன்ன தேவராஜ் மோகனின் அன்னக்கிளியையும், மொழி மாற்ற படங்கள் என்றாலும் காதலித்து விட்டு ஏமாற்ற நினைக்கும் காதலனை நீதிமன்றத்தில் ஏற்றி நியாயம் கேட்கும் ஒரு பெண்ணைப் பற்றின படமான கே.விஜயனின் விதியும், ஆண் துணை வேண்டாமே தனித்து வாழ முடிவெடுக்கும் ஒரு பெண்ணின் தைரியத்தைச் சொன்ன பாலுமகேந்திராவின் மறுபடியையும் பெண் சார்ந்த படங்களில் முக்கியமானவையாகக் கருதலாம். பிறகு 1984 ல் வெளி வந்த ஆர்.சி.சக்தியின் சிறை. அதன் கதை அனுராதாரமணன். அதில் வரும் நாயகி தன் தாலியை தூக்கி எறிந்து விட்டு யாருடன் கணவன் சந்தேகப்பட்டானோ அவனுடனே வாழ முடிவெடுக்கிறாள். எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்டதுதான். நம்பிக்கைகள் உடையும்போது சமூகத்தின் கட்டுபாடுகளும் உடையும் என்பதை மிக அழுத்தமாய் சொல்லியிருந்தார்.

ஆனால் அதெல்லாம் அந்த காலம் என்பது மாதிரி ஆகிவிட்டது. இருந்த துளிரும் பிடுங்கப்பட்டது. காரணம் சமீபத்திய சினிமாக்கள் மீண்டும் முன்பு எப்போதும் விட கதாநாயகர்கள் கையில் மாட்டிக்கொண்டிருப்பதுதான். அவ்வளவு சுலபமாய் மீள முடியாத துன்பத்தில் இருக்கிறது. பெண்கள் அந்த கதாநாயகர்களின் வில்லியாக சித்தரிக்கப்படுகிறார்கள். சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று ஆட்டோகளுக்கு பின்னால் எழுதப்படும் அபத்த வாசகங்கள் போல் கதாநாயகர்கள் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்.

அவர்களின் பஞ்ச் டயலாக்களில் மாட்டிக் கொண்டு பாவம் பெண்கள் மீளமுடியாமல் முழிக்கிறார்கள். இவர்களின் இமேஜில் மாட்டிக் கொண்டு தங்கள் திறமையோடு காணாமல் போகிறார்கள். காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்குமே வந்து போகிறார்கள். குறைந்த உடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து வந்தால் ஒரு கோடி சம்பளமாம். பாத்திர படைப்பைப் பற்றியோ அதன் குணாதிசயம் பற்றியோ இங்கே நடிகைகள் உட்பட யார் கவலைப்படுகிறார்கள்?

சரி அந்த கால அல்லது இந்த கால பெண் இயக்குனர்கள் என்ன செய்தார்கள்? லட்சுமி, ஜெயதேவி, பி.ஆர். விஜயலட்சுமி, சுஹாசினி, பிரியா போன்ற இயக்குனர் கூட பெரியதாய் பெண் உணர்வை பேசவில்லை. இதில் சுஹாசினி எடுத்த இந்திராவை விட அவர் சின்ன திரையில் செய்த பெண் என்ற தொடரும், ஜானகி விஸ்வநாதனின் குட்டியுமே (ஒரு வீட்டில் வேலையாக இருக்கும் ஒரு சிறுமியைப் பற்றிய கதை) ஒரளவு உணர்வை தந்தது.

சமீபத்திய ஆண் இயக்குனர்களின் படங்களில் ராதாமோகனின் மொழி படத்தில் வரும் வாய்பேச முடியாவிட்டாலும் தன் மீது பரிதாபப்படுபவர்களை உதறித்தள்ளும் அந்த கதாநாயகியையும், பிரியதர்சனால் எடுக்கப்பட்ட முழுவதும் பெண்களாகவே நிறைந்த சிநேகிதியேயையும் குறிப்பிட்டு சொல்லலாம். பிறகு அமீரின் பருத்திவீரன் நாயகி முத்தழகி. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென அந்த திரைப்படம் பயமுறுத்தினாலும் அந்த முரட்டு பெண்ணின் காதலை மறக்கமுடியாது. பிரியாமணிக்கு அது தேசிய விருதினை பெற்றுத் தந்தது. அதற்கு எதிர்பதமாய் இயக்குனர் சசியின் பூ படம் இருந்தது. அவரின் அந்த மாரி கதாபாத்திரம் பாரதிராஜாவின் மண்வாசனையின் முத்துபேச்சியை ஞாபகப்படுத்தினாலும் தன் காதலை தனது கல்யாணத்திற்கு பிறகு மிக மிக மென்மையாய் எண்ணிப் பார்க்கும் தைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

நிஜத்தில்- சமூகத்தின் எல்லாத்துறையிலும் பெண்கள் மிக பெரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொழிலதிபர்களாய், விண்வெளி நிபுணர்களாய், பொறியாளர்களாய், பைலட்டுகளாய், இரவு நேர கால் சென்டர் ஊழியர்களாய் என பல விதத்திலும் உயர்ந்திருக்கிறார்கள். அந்த முன்னேற்றங்களை இன்றைய தமிழ் சினிமா காட்டுகிறதா என்றால் கேள்விக்குறிதான்.எனக்கு தெரிந்த சினிமாவில் இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் உதவி இயக்குனர்களிடம் இந்த கேள்வி கேட்டுப் பார்த்தேன். பெண்களை மையப்படுத்தும் கதைகள் உங்களிடம் உண்டா என்று? அவர்களின் பெரும்பான்மையான பதில் இதுதான். அந்த வகை கதைகள் எல்லாம் சின்னத்திரைக்கு மட்டுந்தானாம். கதை என்றால் அது கதாநாயகர்களை சுற்றித்தானாம். அத்தகைய கதைகளைத்தான் தயாரிப்பாளர்களும் கேட்கிறார்களாம். தொழில்ரீதியான வியாபார நியாயத்தை சொன்னார்கள். ஆண்களின் கதைகளைத்தான் பெண்களும் பார்க்க வேண்டும். அதுயென்ன சமூக நியாயம் என்று புரியவில்லை. சரி அப்படி கதாநாயகர்களை நம்பி எடுக்கப்படும் படங்கள் எல்லாம் ஓடுகிறதா என்றால் அவர்களின் இரு தரப்பிலும் மெளனம் மட்டுமே பதிலாய் இருக்கிறது.

இந்திய அளவில் ரித்விக் கட்டக்கின் மேக தக்க தாரா, சத்யஜித்ரேயின் சாருலதா, மெஹ்பூப்கானின் மதர் இண்டியா, தீபா மேத்தாவின் பயர், அபர்ணாசென்னின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர், உலகளவில் பெண்கள் மனதை கூறு போட்டு பார்க்கும் ஸ்வீடன் நாட்டு இயக்குனர் இக்மர் பெர்க்மெனின் ஆட்டம் சொனாட்டா, க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், ஈரானிய இயக்குனர் மார்சேக் மஸ்கினியின் த டே ஐ பிகேம் எ உமென், சீன இயக்குனர் யாங் இமோவின் ரோட் ஹோம் மற்றும் ஸ்டோரி ஆப் த க்யூ ஜூ மாதிரியோ கூட இங்கே படங்கள் தேவையில்லை. பூவே பூச்சூடவாவில் வரும் அந்த குறும்புக்கார நவீன மங்கை சுந்தரி (நதியா) கூட காணாமல் போனதுதான் வருத்தமாய் இருக்கிறது. விளம்பரங்கள் பயன்படுத்தும் வியாபார உத்தியாக மட்டுமே சினிமாவில் பெண்கள் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு யார் காரணம்? மக்களா? இயக்குனர்களா? அல்லது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களா? யார் இதை காதில் வாங்கிக்கொண்டு பதில் சொல்லப்போகிறார்கள்? தெரியவில்லை.

சினிமா என்பது மிக பெரிய ஆயுதம். இந்த ஆயுதத்திற்கு இரண்டு முனைகள் இருக்கிறது. அதன் ஒரு நல்ல முனையை யார் சரியாய் பயன்படுத்த போகிறார்கள்? அதுவும் தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவிற்கு வயது மட்டும் எண்பதாக போகிறது. அது ஒரு சாதனையா என்பதுதான் கேள்வியே..!