November 28, 2009

பாதியில் நின்ற பாடல்

இசை அமைப்பாளர் ஓவியன் பற்றிய சில நினைவுகள்

எந்த திருப்பத்தில் எதுவும் நிகழலாம் என்கிற மாதிரிதான் இந்த வாழ்க்கை. அந்த மாய நிகழ்வுகளின் சுவாரஸ்யம் சில சமயம் மொத்த வாழ்வின் மீதும் ஒரு வெறுப்பை உமிழ்ந்து விடுகிறது. ஒரு மனிதனை உச்சி வரை உயர்த்தி விட்டு சட்டென மேலிருந்து தள்ளி விடும் அதன் இயல்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த வாழ்க்கையின் க்ளைமாக்ஸ் மட்டும் ஏன் எப்போதும் சுபமாய் இருப்பதில்லை? விடையில்லா புதிராய் இதுயென்ன விளையாட்டு? இதுயென்ன கொடுமை? என இப்படியெல்லாம் எரிச்சலை சமீபத்தில் இசையமைப்பாளர் ஓவியனின் திடீர் மரணம் என்னுள் ஏற்படுத்தியது.

ஓவியன் அதிகம் உயரமில்லை. கருத்த தேகம். நிரந்தரமாய் முகத்தில் இருக்கும் இலேசான தாடி. நெற்றியில் சந்தனம் குங்குமம். அடர்த்தியாய் தலை முடி. எப்போதும் மிக இளமையாய் சுத்தமான உடை. கூட ஒரு சைக்கிள். அதற்கு அவ்வவ்போது மாறும் டிரைவர்கள். இதுதான் இசையமைப்பாளர் ஓவியன். நான் சென்னை வந்த சில நாட்களிலேயே மிக நெருக்கமான நண்பர் ஆனவர்களில் இவரும் ஒருவர். நண்பர் திரு.காந்தி மூலம் எனக்கு அவர் அறிமுகம். மிக சுலபமாக ஒட்டிக் கொள்ளும் இயல்பு. யதார்த்தமாய் அன்பை பொழியும் தன்மை. என அவரிடமிருந்த விசேச குணங்கள் அவர் மீது எனக்கு உடனடியாய் ஒரு ஈர்ப்பைத் தந்தது.

தேனாம்பேட்டை. நான் தங்கியிருந்த அறைக்கு முதல் முதலாய் அவரது பாடல்களை பாடிக்காட்ட வந்திருந்தார். கையில் ஆர்மோனியப் பெட்டி எதுவுமில்லை. அறையிலிருந்த எழுதும் அட்டையை மட்டும் எடுத்துக் கொண்டார். தரையில் அமர்ந்தார். அதில் தாளம் போட ஆரம்பித்தார். விரல் அந்த அட்டையில் விளையாட ஆரம்பித்தது. கண்களை மூடிக் கொண்டார். மிக சன்னமாக ஒலிக்க ஆரம்பித்த அவர் குரல் பிறகு பலமானது. ‘கண்ணனின் குழலோசை காதோரந்தான்.. வந்தது எனை தேடி நாள்தோறும்தான்’. இளையராஜாவை இலேசாய் ஞாபகப்படுத்தும் கட்டையான குரல்.

அவர் பாடப் பாட நான் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன். இந்தச் சின்ன உருவத்திற்குள்ளிருந்து இவ்வளவு அழகான பாடலா? இப்படியொரு வீச்சா? என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்தடுத்து நிறைய பாடல்களை பாடிக் காட்டினார். முடிந்ததும் நான் பாராட்டி விட்டு கேட்டேன். முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டீர்களா என்றேன். இல்லை எனறார். இலக்கியப் பரிச்சயம் உண்டா என்றேன். அதற்கும் இல்லை என்றே பதில் வர எனக்கு மேலும் ஆச்சர்யம் வந்தது. அப்புறம் எப்படி இவ்வளவு இயல்பாய் வந்து விழுகிறது பாடல்களும் அதற்கான வார்த்தைகளும்.! வாசகன் என்ற பெயரில் அறிமுகமான இசையமைப்பாளர் ஓவியன் ஒரு பிறவி கலைஞன் என்பதை உணர்ந்தேன். வந்ததும் இவ்வளவு திறமையான மனிதர்களை சந்தித்தபோதுதான் சென்னை மீது எனக்கு இன்னும் காதல் வந்தது.

ஓவியனின் தைரியம் இன்னும் ஆச்சர்யமானது. எந்த கம்பெனி என்று பார்க்க மாட்டார். எந்த தயாரிப்பாளர் என்று யோசிக்க மாட்டார். எவ்வளவு பெரிய இயக்குனர் என்றாலும் எந்தவித தயக்கமுமின்றி அவர்களை அணுகுவார். சுலபமாய் பேசுவார். இருக்கிற டேபிளில் தாளம் போட்டு உடனடியாய் பாடிக் காட்டுவார். அப்படி ஒரு நாள் இயக்குனர் பாரதிராஜாவிடம் பாடிக்காட்ட அவரும் அசந்து போனார். உடனடியாக அவர் ஒரு ஆர்மோனிய பெட்டியை வாங்கி பரிசாக தந்தார். அதைதான் ஓவியன் தன் கடைசி காலம் வரை வைத்திருந்தார். தனது ‘கருத்தம்மா’ படத்திற்கு ஓவியனை இசையமைப்பாளர் ஆக்கும் எண்ணத்திற்கும் அவர் வந்தார். அதற்காக பாடல்களை அவர் கேட்டிருந்தார். ஓவியனும் அதற்காக சில பாடல்களை கம்போஸ் செய்து வைத்திருந்தார். அதில் ‘அழகழகா ஆவாரம்பூ பூத்திருக்கு..’ என்ற பாடலை நாங்கள் இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறுதியில் அந்தப் படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த வாய்ப்பு ஓவியனுக்கு ஏன் அமையாமல் போனது என தெரியவில்லை. வியாபார ரீதியான காரணமா புரியவில்லை.


அதற்கு பிறகு உடனடியாய் ஓவியனுக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு மன்சூர் அலிகானின் ‘ராவணன்’ . அதற்கு பிறகு நடந்த அவரது காதல் திருமணம். சி.ஐ.டி நகரில் குடியிருப்பு. பிறந்த குழந்தைகள் என அவரது வாழ்க்கை பரபரப்பாகவே போனது. அதற்கு பிறகு கிடைத்ததுதான் இயக்குனர் நாகராஜின் ‘தினந்தோறும்’ படம். அதில் நான் உதவி இயக்குனர் என்பதால் ஓவியனுடன் இன்னும் நெருக்கமானேன். உதவி இயக்குனர்களும் திருப்தி ஆகும்வரை அவர் அதற்கு டியூன்கள் போட்டார். மாற்றம் சொல்லும் பாடல் வரிகளை எந்த ஈகோவும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார். நாங்கள் அனைவரும் ஒரு டியூனுக்கு எப்படி பாட்டு வரிகளை அமைப்பது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த படத்தில் வந்த ‘நெஞ்சத்தில் வெகு நாட்களாய்..’ என்ற பாடலும் ‘என் வானம் நீதானா..’ என்ற பாடலும் பரவலான கவனத்தை பெற்றது. அதில் சில பாடல்களை ஓவியனே எழுதியிருந்தாலும் அதில் எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி அவர் எழுதியிருந்த ‘பட்டதாரிதான்..’  என்ற பாடல் குறிப்பிடத் தகுந்தது. கதைப்படி கதாநாயகி சுஜாதாவின் ரசிகை. அது தெரிந்து கதாநாயகன் அவளது காதல் வேண்டி அந்த புத்தகங்களை தேடித்தேடி தருவதாக சூழல். அந்த பாடலை சுஜாதாவே ரசித்தார். அதுதவிர அந்தப் படத்தின் விமர்சனத்தை சுஜாதாவே குமுதத்தில் எழுதினது இன்னும் சிறப்பு.

’தினந்தோறும்’ படம் வெற்றிப் பெற்றது. அதன் பின்னணி இசை பாடலை விட அதிகம் பேசப்பட்டது.
ஆனாலும் ஓவியனுக்கு ஏன் பெரியதாய் வாய்ப்புகள் தேடி வரவில்லை எனத் தெரியவில்லை. அதில் அவருக்கு நிறைய வருத்தம் இருந்தது. அதற்குப் பிறகு அவருக்கு திரு.மன்சூர் அலிகானே மீண்டும் தன் ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ படத்தில் வாய்ப்பளித்தார். மற்றும் வெங்கட்பிரபு நடித்த ‘வசந்தம் வந்தாச்சு’ என்ற படத்திற்கும் இசையமைத்தார். ஆனாலும் அவர் வாழ்வில் வசந்தம் வரவில்லை. தனக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காதது, நல்ல இயக்குனர்களிடமிருந்து வாய்ப்பு வராததும் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்திருந்தது. அதுதவிர குடும்பத்தை சென்னையில் நடத்த முடியாமல் தன் சொந்த ஊருக்கே அனுப்பியிருந்தார். இந்த போராட்டங்கள், அதன் வலிகள், மன உளைச்சல்கள் அவரின் குடிப்பழக்கத்தை அதிகமாக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இடையில் ‘தெய்வாமிர்தம்’ என்ற பக்திப்பாடல்களின் ஆல்பம்,  ‘அவளுகென்று ஒரு வானம்’ போன்ற சில தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்தார். ஆனாலும் தான் நினைத்த இடத்தை அடைய முடியாத வருத்தம் அவரை அழுத்திக் கொண்டே இருந்தது. எப்போது என்னை சந்தித்தாலும் நாம் இணைந்து ஒரு நல்ல படத்தை தரவேண்டும் ராம் என்பார்.

நான் ஓவியனை கடைசியாக சந்தித்தது கடந்த செப்டம்பரில்தான். ‘பரிமளா திரையரங்கம்’ என்ற அவரது புதிய படத்தின் கதை விவாதத்திற்கு என்னையும் திரு.காந்தி அவர்களையும் அழைத்திருந்தார். இந்த படம் எனக்கு நல்ல திருப்புமுனையை தரும் என மிக நம்பிக்கையோடு எங்களிடம் சொன்னார்.  நாங்கள் ஹோட்டலில் சாப்பிட்டோம். ஓவியன் சாப்பிட்ட அளவு ஒரு குழந்தை சாப்பிடுவதை விடவும் குறைவாகவே இருந்தது. மற்றும் தொடர்ந்து சிகரெட். அவருக்கு எப்போதும் திடகாத்திர உடம்பு இல்லை என்றாலும் இருக்கிற உடம்பை காப்பாற்றிக் கொள்ள எச்சரித்தோம். அந்த படத்தின் பாடல்களை எங்களுக்கு போட்டு காட்டினார். நன்றாகவே வந்திருந்தது. இன்னும் அதற்குள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்றார். மேலும் நாங்கள் சொன்ன கருத்துக்களை கேட்டுக் கொண்டார். நாங்கள் கை குலுக்கி விடை பெற்றோம். அதுதான் நாங்கள் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று அப்போது எனக்கு தெரியாது. அந்த கை குலுக்கலில் இருந்த கடைசி உஷ்ணம் என் கையிற்குள் இன்னும் இருப்பதாக உணர்கிறேன். கடந்த தீபாவளி முடிந்து மீண்டும் தன் சொந்த ஊரான மொரப்பூருக்கு போனார். அங்கே திடீர் நெஞ்சு வலியின் காரணமாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது.

அவருக்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள். ஓவியன் பெரியதாய் சம்பாதிக்காத நிலையில் அவரது குடும்பத்தின் எதிர்காலம் மிக பெரிய கேள்விக் குறியாய் நிற்கிறது. ஓவியனின் நாற்பத்தி இரண்டு வருட உழைப்பு அவர்களது குடும்பத்தின் அடுத்த வேளை உணவிற்குக்கூட உதவாமல் போன சோகத்தை என்னவென்று சொல்வது?

ஓவியன் ஒரு நல்ல இசைஞன். அற்புதக் கலைஞன். ஆழமான ரசிகன். கிட்டதட்ட 1000 பாடல்களுக்கு டியூன் போட்டு தன் டைரியில் எழுதி வைத்திருந்தார். அந்த பாடல்கள் பதிவாகாமலே இயற்கையோடு கலந்து விட்டது. திறமை இருந்தும் அது அறியப்படாமலேயே போகும் சோகத்தை என்ன சொல்வது? நினைத்ததை அடைய முடியாமல் பாதியில் நின்று போகும் பயணங்களை என்னவென்பது? இந்த வாழ்க்கை விசித்திரமானது மட்டுமல்ல. கொஞ்சம் கொடூரமானதும்கூட. ஆனாலும் வேறு வழியில்லை. அதன் சுவாரஸ்யத்தைத் தேடி நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அந்த சுவாரஸ்யத்தில் ஒன்றாய் ஓவியனின் பாடல்கள் என்றும் என் (நம்) காதோரம்தான்.

ஓவியனின் பாடல்களைக் கேட்க:
1. தினந்தோறும்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மேலானவை.