November 02, 2009

கொரியன் படங்கள் நமஹ..!

சினிமா ஒரு எழுத்தாளராய் இருந்து எழுதுகிற மாதிரி சுதந்திரமானதல்ல. சிறுகதை மாதிரி நாமே யோசித்து நாமே எழுதி நாமே நமக்கு நாமே தோளை தட்டி ‘சூப்பர் மாப்பிள்ளே' என்று பாராட்டி அனுப்புகிற சமாச்சாரமும் அல்ல சினிமா. இது ஒரு கூட்டு முயற்சி என்றே பழக்கப்பட்டிருக்கிறது. எந்த இயக்குநரும் இதுதான் கதை என்றோ இதுதான் திரைக்கதை என்றோ அல்லது இந்த உணர்வுக்கு இந்த ஷாட்தான் வைக்க வேண்டுமென்ற தொழில் நுட்பங்களையோ அல்லது அதன் சினிமா மொழியோ சொல்லித் தருவதில்லை. ஆனால் இலக்கியத்தை பொறுத்தவரை சிறு சிறு குழுக்களாக இயங்கினாலும் அடிக்கடி பகிர்தல் கூட்டங்கள், விவாத சந்திப்புகள் நடக்கும். அதுதவிர நீங்கள் விருப்பப்பட்டால் பிரபஞ்சன், கோணங்கி, சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் என நீங்கள் பெரியதாய் நினைக்கிற எந்த எழுத்தாளர்களையும் சுலபமாய் சந்திக்க முடியும். அவர்களுடன் கலந்துரையாட முடியும். இலக்கியத்தின் எந்த சந்தேகங்களையும் அவர்களிடம் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் சினிமாவை பொறுத்தவரை அதற்கு சாத்தியமே இல்லை. இயக்குநர்கள் சங்கரையோ, மணிரத்னத்தையோ அவ்வளவு சுலபமாய் சந்திக்க முடியுமாயென்ன? கலந்துரையாட முடியுமாயென்ன? காரணம் இங்கே பணமே பிரதானம். பணம் இருந்தால் எதையும் தெரிந்து கொள்ளலாம். சினிமா இங்கே அரசாங்கத்தின் விருதின் போது கலையாக மாறிவிடும். மற்ற சமயத்தில் அது வியாபாரமாகவே இருக்கும். ஆகவே நண்பர்களோடு பகிர்ந்துக் கொண்டே சினிமாவைக் கற்றுக் கொள்ள முடியும். நிறைய படங்கள் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும்.தமிழ் படம் பார்த்து தமிழ் படம் எடுத்தது ஒரு காலம். இப்போது அது உலக சினிமாக்கள் பார்த்து தமிழ் சினிமா எடுக்கப்படுவதாய் பரிமாணம் பெற்றிருக்கிறது. கையில் ஒரு உலக சினிமாவாவது இல்லாமல் எந்த உதவி இயக்குநரையும் சந்திக்க முடிவதில்லை. அறைகளிலும் வீடுகளிலும் அவர்களது ஷெல்ஃப்களில் புத்தகங்களை விட உலக சினிமாக்களே இப்போது அதிகம் அடுக்கப்பட்டிருக்கிறது. அகிரா குரோசவாவும், ரோமன் பொலன்ஸ்கியும், இங்மர் பெர்க்மெனும் இப்போதைய தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள் வாய்களில் பாலசந்தர், பாரதிராஜாவை விட அதிகம் புழங்குகிறார்கள். மகிழ்ச்சியான மாற்றம்தான். மிக சந்தோசமான வளர்ச்சிதான். அவர்களின் திரை மொழி, அதற்கு பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இங்கே அவர்களின் கதையைக் கூட அப்படியே பயன்படுத்தும் போக்குகள்தான் அதிர்ச்சியாய் இருக்கிறது.

மிக பெரிய இயக்குநர்களே அந்த தவறை எந்த கூச்சமும் இல்லாமல் செய்கிறபோது வருங்கால இயக்குநர்களை என்ன சொல்வது? அதற்கு சமீபத்திய உதாரணம் A.R.முருகதாஸின் ‘கஜினி' (தமிழ்-ஹிந்தி) -யைச் சொல்லலாம். (ஹிந்தியில் சக்கைப்போடு போட்டு 300 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம்). அது. இயக்குநர் Christopher Nolan -ன் Memento -வின் காப்பி எனலாம்.சமீபத்தில் வெற்றி பெற்ற வெங்கட் பிரபுவின் ‘சரோஜா', Stephen Hawkins-ன் ஹாலிவுட் படமான ‘Judgment Night'-ன் அப்பட்டமான காப்பி.

அதே போல் சமீபத்தில் சொதப்பிய விஷ்ணுவர்தனின் ‘சர்வம்' என்னும் திரைப்படம் Alejandro Gonzalez Inarritu -வின் 21 grams என்ற படத்தின் தழுவல் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். கேட்டால் ‘Inspiration' என்கிறார்கள். செய்கிற தவறுக்கு சப்பைக்கட்டாய் ஒரு வார்த்தை ‘Inspiration'. அதுவும் ஆங்கில வார்த்தை.

சிறந்த படங்களின் உத்திகளை எடுத்து பயன்படுத்துவதைக்கூட தொழில்நுட்பமாய் நினைத்து மன்னிக்கலாம். இயக்குநர் Tom Tykwer -ன் Run Lola Run (German) மற்றும் Kieslowski -ன் Blind Chance -ன் உத்திகளை பயன்படுத்தி இயக்குனர் ஜீவா 12B எடுத்து சூடு போட்டுக் கொண்டாலும் அந்த முயற்சி பாராட்டப்பட்டது.  இயக்குநர் சேரன் உலக படங்களின் சில அழகான உத்திகளை மட்டும் எடுத்து மிக சரியாக நம் வாழ்க்கையோடு பயன்படுத்துவார். Zhang Yimou வின் The Road Home படத்தில் இருந்து வரும் சில காட்சிகளின் தன்மைகள் ஆட்டோகிராப்பிலும், தனது தவமாய் தவமிருந்தில் Live காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் Flashback காட்சிகள் கலரில் வருவதும் இந்த படத்தின் உத்திகளே. ஆனால் 1941-ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான Orson Welles -ன் Citizen Cane எனும் படத்தின் அற்புதமாய் கதை சொல்லும் அந்த உத்தியை நம் தமிழில் இதுவரை யாரும் கையாண்டதில்லை என்பது வருத்தமான விஷயமே.

தற்போது வருங்கால இயக்குநர்களின் ஆதர்சமான படங்களாய் இருப்பது கொரியன் படங்களே. இதன் பாதிப்பு Swine flu-வை விடவும் வேகமாய் பரவி வருகிறது. DVD கடைகளிலும் இதுவே பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கென்று தனி விலையை சில கடைகள் நிர்ணயிக்கின்றன. சென்னை திரைப்பட விழாகளிலும் கொரியன் படங்கள் போடும் போது அரங்கு நிறைந்து விடுகிறது. பூனையின் குரலாய் அதன் மொழியின் பாதிப்பு கூட படம் பார்ப்பவர்களிடம் நெடுநேரம் ஒட்டிக் கொள்கிறது. வெளியே வந்து ‘ட்ட்ட்டீ.. சசசாப்பிட வ்வ்வர்றீங்களா..' மாதிரியான கொரியன் உச்சரிப்பில்தான் கூப்பிடுகிறார்கள். கொரியன் படங்களில் இருக்கும் குடும்ப அமைப்பும் தாயின் மீதான அவர்களின் மதிப்புகளும் நம் சினிமாவையே அதிகம் ஒத்திருக்கிறது. அது தவிர அதன் பெரும்பான்மை படங்களில் ஆக்ரமித்திருப்பவை காதல் கதைகளே. தமிழ் சினிமாவில் எந்த கதையானாலும் அதை காதல் வழியாகவே சொல்கிறார்கள் அல்லது சொல்ல வேண்டியிருப்பதால் கொரியன் படங்கள் எளிதாக களவாடப் பயன்படுகிறது.


கொரியன் படங்களை நமது இலக்காக வைத்து இயங்குவது சரியா எனத் தோன்றவில்லை. அதை நமது சினிமாவின் அடுத்த version என்று வேண்டுமானால் சொல்லலாம். ஹிந்தி படங்கள் அதற்கு இணையாக வரத் தொடங்கி விட்டன.  ஈரான், இத்தாலி, லத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் படங்கள் வளர்ச்சியை யோசிக்கையில் நாம் ஐம்பது வருடங்களாவது பின்தங்கியிருக்கிறோம் எனலாம்.
Vittorio De Sica-வின் 'The Bicycle Thief' (1948), François Truffaut-வின் ‘The 400 Blows' (1959) மாதிரி இந்த வாழ்க்கையை வேறொரு தளத்திலிருந்து அணுகி சினிமா கலையின் உன்னதமான இடத்தை தொட்ட இந்த நியோ ரியலிஸ படங்கள் மாதிரிகூட வேண்டாம். அதே கொரியன் இயக்குனர்கள் kim ki tuk-ன் ‘Four season' (Spring, summer, fall, winter and spring), Im-kwon-Taek -ன் 'Painted Fire', Jeong-Hyang -ன் 'The way Home' மாதிரி படங்களை நாம் இலக்குகளாக எடுத்துக் கொள்ள வேண்டாமா?

ஆனால் தமிழ் சினிமாவில் நான் சந்தித்த வட்டத்திலிருந்து யோசித்தால் அதற்கான சாத்தியம் மிக குறைவு என்றே தோன்றுகிறது. சமீபத்தில் நான் எனது சினிமா நண்பரின் அறைக்கு போனேன். எதிர்பார்த்தது போலவே அவரது அறையில் உலக படங்கள் நேர்த்தியாய் அடுக்கிய ஷெல்ப். அதிலிருந்த ஒரு படத்தை எடுத்து பார்த்தேன். அது கொரியன் படமான ‘My Sassy Girl'. பார்த்துட்டு தரட்டுமா என்றேன். அது மட்டும் வேண்டாம் என்றார். ஏன் என்றேன். அதை வைத்து ஒரு script பண்ணியிருக்கிறேன் என்றார். நான் சிரித்துக் கொண்டு அதை அவரிடம் திரும்பி தந்துவிட்டேன். இப்படிதான் இருக்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.

நிறைய நண்பர்களிடம் நான் கதை கேட்டிருக்கிறேன். எழுதுகிற ஆள் என்பதால் அந்த வாய்ப்பு எனக்கே அதிகம் வாய்க்கிறது. என் நண்பர்கள் கிண்டலாய் சொல்வார்கள். ‘இவ்விடம் கதைகள் நல்ல முறையில் பழுது பார்த்து தரப்படும் என ஒரு போர்ட் வச்சிரேன்.' என்பார்கள். கதை கேட்கவும் திறமை வேண்டும். பொறுமை வேண்டும். அந்த அனுபவம் சில சமயம் தூக்கம் கெடுக்கும். பல சமயம் தூக்கம் கொடுக்கும். எனக்கு காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷிடம் மாட்டக் கொள்ளும் பாலைய்யா மாதிரி அனுபவங்கள்தான் ஏராளம்.

அப்படி சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு கதை சொன்னார். அந்த கதையில் ஹீரோவை படத்தின் ஆரம்ப கட்டத்திலிலேயே சிலர் கடத்துகிறார்கள். அவனை ஒரு அறையில் போட்டு பூட்டுகிறார்கள். அவனுக்கு ஊசி போட்டு மயங்க வைத்து உடைகள் மாற்றப் படுகிறது.  பிறகு அவன் தெளிந்த பிறகு அவனுக்கு உணவு அளிக்கப்படுகிறது. இது தொடர்ந்து அவனுக்கு 10 வருடத்திற்கும் மேலாக நடக்கிறது என்றார். கேட்டதும் எனக்கு இந்த கதையை எங்கேயோ பார்த்திருக்கிறோமே கேட்டிருக்கிறோமே எனத் தோன்றியது. பிறகு ஞாபகம் வந்தது. படம் : Old Boy. நாடு: கொரியா.

மேலும் கதை தொடர்ந்தது. அந்த கதாநாயகன் தன் flashback ஐ சொல்கிறான் அதில் வரும் காதல் காட்சியில் அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். தீவிர காதலின் ஒரு கட்டத்தில் அந்த பெண் ஒரு விபத்தில் இறந்து போகிறாள். ஆனால் சாகிற தருவாயில் அவள் சொல்கிறாள். ‘நான் சாகமாட்டேன். உன்னை சுற்றியே இருப்பேன். காற்றாய் இருப்பேன். காற்றாய் தொடர்வேன் என்கிறாள். அது மாதிரியே அவள் செத்த பிறகு ஒரு காற்றாடியாய், ஒரு பட்டமாய், ஒரு பலூனாய், மற்றும் பல காற்றின் அசைவுகளில் அவள் அவனை சுற்றி சுற்றி வருகிறாள்.அதை அவர் சொல்ல சொல்ல இதையும் எங்கயோ பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. அந்த படம்: Wind Struck. நாடு: கொரியா.

பிரச்சனைகளின் முடிவில் கதாநாயகனும் வேறொரு கதாநாயகியும் மின்மினிகளின் பின்னணியில் ஒன்று சேர்வதாய் கதை முடிந்தது. இந்த காட்சியும் அவரின் சொந்த கற்பனை அல்ல. இந்த காட்சியின் படம்: The Classic. நாடு: கொரியா.


கதை சொல்லி முடித்ததும் எப்படியிருக்கிறது என்றார். என்ன சொல்வது? நான் இயக்குநர் Kim-Ki-duk -க்கையும், இயக்குநர் Jae-young Kwak -யும்தான் பாராட்ட வேண்டும் என்றேன். அவர் அதிர்ச்சியோடு ஏன் என்றார்? உங்களை சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றேன். அதற்கும் புரியாமல் பார்த்தார். நான் சற்று கோபமாகவே சொன்னேன். கிரியேட்டிவிட்டி என்பது ஒரு பயிற்சி. அதற்கு நாம் தீனி கொடுக்க கொடுக்கத்தான் அது நமக்காக வேலை செய்யும். உங்களுக்கு வயது இருக்கிறது அதை இழந்து விடாதீர்கள் என்றேன். நம் வாழ்க்கையில் நம் சுற்றிலுமே நிறைய கதைகள் இருக்கின்றன. அதிலிருந்து கதைகள் எடுத்து படங்கள் பண்ணினாலே காலத்திற்கும் தீராது என்றேன்.  துவக்கத்திலிருந்தே இந்த விதமாய் பழகிக் கொள்ளாதீர் என்றேன். அவர் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார். சரி இதெல்லாம் தொகுத்து படம் பண்ணினால் படத்தில் அந்த இயக்குநர்களின் பெயர்களை போடுவீர்களா என்றேன். எதுக்கு என்றார். ஒரு நியாயம்தான். ‘பூ' படத்தில் இயக்குநர் சசி சீனா படமான 'Road Home' படத்திலிருந்து சில காட்சிகளையும் அதன் இசையையும்  பயன்படுத்தியதற்காக நன்றி கார்ட்டில் ‘Zhang Yimou’ வின் பெயரை போட்ட மாதிரி போடுவீர்களா என்றேன். போடலாமே என்றார். அப்படீன்னா நான் சொல்ற இந்த வரிகளையும் உங்கள் டைட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றேன். சொல்லுங்கள் என்றார். நான் Kim ki-duk-ம், Jae-young Kwak -ம் மன்னிக்க என்றும் போடுங்கள் என்றேன்.

8 comments:

 1. போகிற போக்கில் பல நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்திய அழகான கட்டுரை.

  ReplyDelete
 2. தமிழ் சினிமாவின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இயக்குநர்கள் ஆகும் ஆர்வக்கோளாறு உள்ளவர்களால் ஏற்படுகிற பிரச்சினை. தமிழில் எத்தனையோ நல்ல சிறுகதைகள், நாவல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கிற பொறுமை நம் இயக்குநர்களிடம் இல்லை.

  ReplyDelete
 3. வாழ்க்கைப் பார்த்துவிட்டு படம் எடுப்பவர்களைவிட டிவிடி பார்த்துவிட்டு சினிமா எடுப்பவர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள்... மறுபடியும் ஒரு நல்ல கட்டுரையைத் தந்திருக்கிறீர்கள் ராம்

  ReplyDelete
 4. அருமையான கட்டுரை.இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் கதை தான் இது. தாங்களை அறிவுஜீவிகள் என மக்களிடம் அடையாளப்படுத்திக்கொள்ளும் இயக்குநர்களுக்கு இது செருப்படி. தாங்களை தவிர வேறு யாரும் இப்படி யோசிக்க முடியாது என மக்களை நம்ப வைக்கிறார்கள் இன்றைய பெரும்பான்மையான தமிழ் சினிமா இயக்குநர்கள். இந்த அருமையான பிற மொழி படங்கள் எங்கே கிடைக்கின்றன. தகவலை தய்வு செய்து கொடுக்கவும்.

  ReplyDelete
 5. Memento விலிருந்து கஜினி பிறந்தது 'தழுவலுக்கு' சரியான அளவுகோல் என்பேன். அந்த ஆங்கிலப்படம் செம போர். இயக்குனரின் திறமையையும், பார்ப்பவரின் சாதாரணத்தன்மையையும் (mediocrity) பறைசாற்றவே எடுக்கப்பட்டது போல் இருக்கும். கஜினி ஒரு மிக இனிமையான காதல் கதையையும், சிறப்பான இசையும், திறமையான நடிப்பும் கொண்ட ஒரு திரைப்படம் (இறுதியில் பல சறுக்கல்கள் இருந்தாலும்!). முருகதாஸ், ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கடன் வாங்கினார்; முழுக்கதையையும் அல்ல.

  ReplyDelete
 6. நன்றி SRK, கனகராஜன், ரூபவதி, ராம்!

  @ரூபவதி : நீங்கள் சென்னை என்றால் பாரிஸ் கார்னரில் பர்மா பஜாரில் சில பிரத்யேக கடைகளிலும், அண்ணா மேம்பாலம் பக்கம் வந்தால் பார்சன் காம்ளக்ஸிலும் உலகப் படங்களை சுலபமாக பெறலாம்.

  ReplyDelete
 7. பெரும்பாலான உலக சினிமாக்கள் அவரவர் கலாச்சார அடிப்படையில் உருவாக்கபடுவது. நாம் அதிகம் அறியாத கலாச்சார அடிப்படையில் இருந்து கதைகளை உருவும் போது திரைப்படம் கேலி கூத்தாகி விடுகிறது. நல்ல திரைக்கதையின் காரணமாக சில தப்பி பிழைத்தாலும் பெரும் பாலான திரைப்படங்கள் டம்மி பீஸ்தான். உலக சினிமாக்கள் 40 ரூபாய்க்கு கிடைக்கும் தேசத்தில் கொஞ்சம் சுயபுத்தியுடன் இருக்கும் இயக்குனர்கள் பிழைத்து கொள்கிறார்கள்..

  ReplyDelete
 8. jeeva's 12b is also a copy.. nt frm run lola run, frm "sliding doors"... not only the plot he has lifted so many sequences.. chk the wikipedia page and read the story plot..

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் மேலானவை.